மயிலாடுதுறை திமுக வேட்பாளரை ஆதரித்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்துவரும் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், மக்களை கவரும் வகையில் இடங்களுக்கு ஏற்ப செய்திகளையும் மக்களிடம் கூறி நெகிழவைக்கிறார்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுகவும், அதிமுகவும், நேரடியாக மோதுகின்றன. 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் மயிலாடுதுறையில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறை தொகுதி என்றாலே காங்கிரஸின் கோட்டை மணிசங்கர் ஐயரின் சொந்த தொகுதி என்று பேசப்பட்டு வரும் நிலையில், இந்தமுறை திமுகவின் சார்பில் முன்னாள் திருவிடைமருதூர் எம்.எல்.ஏ. ராமலிங்கத்திற்கு சீட்டு வழங்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
அதிமுக, திமுகவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர், ராமலிங்கத்திற்கு வாக்கு கேட்டு வீதிவீதியாக பிரச்சாரம் செய்து வருகிறார். பாரம்பரியம் கொண்ட திருப்பனந்தாள் காசி மடம் பகுதில் மடத்தின் தன்மைகளைப் பற்றி பேசினார். பந்தநல்லூர் பகுதிக்கு வந்து பசுபதிகோயில் மற்றும் அதனை சுற்றியிருக்கும் கோட்டை வரலாறுகளைப்பற்றி பேசினார். அதேபோல் கிராமப்புறங்களுக்கு செல்லும்பொழுது "நான் மயிலாடுதுறைக்கு வரும்போது திக்கும் தெரியாது திசையும் தெரியாது, என்னை கரம் பிடித்து அழைத்துச் சென்றவர்களில் ஒருவர் ராமலிங்கம். இன்றைக்கு எனக்கு எல்லா வீதிகளையும் தெரியும். ஆனால், ராமலிங்கம் எம்.பி ஆவது உறுதி, அவருக்கு டெல்லியில் விதிகள் தெரியாது. அவருக்காக நான் அங்கு காத்திருப்பேன். ஒவ்வொரு வீதிகளையும் கரம் பிடித்து அழைத்துச் சென்று காண்பிப்பேன். இது நான் மயிலாடுதுறை தொகுதி மக்களுக்கு செய்யும் நன்றிக்கடன். என்னால் இந்த தொகுதியை மறக்க முடியவில்லை. ஆனால் இந்த முறை எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் இதுவரை கை சின்னத்திற்கு வாக்களித்த நீங்கள் இந்த முறை சூரியனுக்கு வாக்களித்து மோடியை வீட்டுக்கு அனுப்புங்கள்" என வாக்கு சேகரித்தார். இது அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது.
அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தவர், "மயிலாடுதுறை தொகுதியில் உள்ள வாக்காளர்கள் ஆர்வத்துடன் உற்சாகத்துடன் இருக்கின்றார்கள். திமுக வேட்பாளர் ராமலிங்கத்திற்கு அமோக வரவேற்பு அளித்து வருகிறார்கள். அதனால் ராமலிங்கம் வெற்றி பெறுவது உறுதி. ஏழு முறை இந்த தொகுதியில் போட்டியிட்டவன் இந்த அனுபவத்தை வைத்து ராமலிங்கம் வெற்றி பெறுவார் என உறுதியுடன் கூறுகிறேன். மக்கள் சந்தோஷமாக இருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முறை 40 தொகுதிகளிலும் நமக்குதான் வெற்றி என்று உறுதியுடன் தெரிகிறது. தமிழகத்திலும் மத்தியிலும் இரண்டு தளபதிகள் ஆட்சி செய்யப் போகிறார்கள். ராகுல் காந்தி பிரதமராகவும், மு.க. ஸ்டாலின் முதல்வராகவும் ஆட்சி செய்யப் போகிறார்கள்" என்றார்.