
மூன்று நாள் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருக்கும் நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வரின் டெல்லி பயணம் குறித்து விமர்சனத்தைத் தொடர்ந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''நாங்கள் மத்திய அமைச்சர்களைச் சென்று பார்க்கும் பொழுது அதிமுக அரசு அடிமை அரசாக இருக்கிறது, பாரதிய ஜனதாவுக்கு அடிமையாக இருக்கிறது, டெல்லிக்கு காவடி தூக்கிச் செல்கிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். இப்பொழுது எதை தூக்கிச் சென்றிருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை என இன்றைக்கு மக்கள் கேட்கிறார்கள். பிரதமரை சென்று பார்த்திருக்கின்றார், உள்துறை மந்திரியை பார்த்திருக்கிறார், பாதுகாப்புத்துறை மந்திரியை பார்த்திருக்கிறார், நிதியமைச்சரை பார்த்திருக்கிறார், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை பார்த்திருக்கிறார், ஜவுளித்துறை அமைச்சர் இப்படி எல்லா அமைச்சர்களையும் ஸ்டாலின் பார்த்திருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களைப் பெறுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்திய நாட்டுடைய பாரதப் பிரதமர் தமிழகத்திற்கு வருகின்ற பொழுது 'கோ பேக் மோடி' என எல்லா பகுதியிலும் பலூன் விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இன்றைக்கு அவரை முதலமைச்சராகப் பொறுப்பேற்று இரண்டுமுறை பார்த்துவிட்டு வந்திருக்கிறார். ஒரு பாரத பிரதமரை கொச்சைப்படுத்துகின்ற அளவுக்கு, இழிவுபடுத்துகின்ற அளவுக்கு அரசியல் நாகரிகம் தெரியாத ஒருவர் என்றால் அது ஸ்டாலின் தான். தமிழ் மண்ணிற்கு வருகின்ற பொழுது அனைவரையும் வரவேற்றுதான் பழக்கம். ஆனால் அந்த நாகரிகம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்பொழுதுமே கிடையாது. அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு டெல்லியில் கிடைத்ததாம். அது பொறுக்கமுடியாமல் எடப்பாடி பழனிசாமி இப்படி விமர்சிக்கிறார் என்கிறார். எப்படி வரவேற்பு கிடைத்தது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். ஆட்களைத் திரட்டி வந்து இவர்களே ஒரு செயற்கையான கூட்டத்தைக்கூட்டி அதில் அவர்களுக்கு ஒரு புகழை தேடிக் கொள்கிறார்கள். அதில் எங்களுக்கு ஒரு சங்கடமும் கிடையாது. ஆனால் பாதுகாப்புதுறை அமைச்சரை பார்த்துவிட்டு அவர் மிகப் பெரிய மரியாதை கொடுத்தார், கார் வரை வந்து வழியனுப்பி விட்டுச் சென்றார் அப்படி எல்லாம் பேசுகிறார்கள். அப்படி இருக்கின்ற மத்திய அரசை ஏன் வசைபாட வேண்டும்'' என்றார்.