நான் திமுகவிற்கு மீண்டும் வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மு.க.அழகிரி இன்று காலை தனது குடும்பத்தினருடன் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
என் தந்தையிடம் என் ஆதங்கத்தை வேண்டிகொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. தலைவர் கலைஞர் அவர்களின் உன்மையான அனைத்து விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் எல்லாம் என் பக்கம் உள்ளனர் என்னை ஆதரித்துக்கொண்டிருக்கின்றனர்.
இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்புடையது தான். திமுக செயற்குழு கூட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் தற்போது திமுகவில் இல்லை என கூறினார்.
இதைதொடர்ந்து, கோபாலபுரம் இல்லம் சென்ற அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம் தங்களது ஆதங்கம் என்ன என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கட்சி ரீதியான எனது ஆதங்கம் குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் சொல்கிறேன் என்றார்.
தொடர்ந்து அவரிடம் கட்சியில் பிளவு தொடங்கியிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நான் கட்சியிலே இல்லை என்று கூறினார்.
இந்நிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு மு.க.அழகிரி அளித்த பேட்டியில்,
நான் திமுகவிற்கு மீண்டும் வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை. நான் வந்தால் வலிமையான தலைவராகி விடுவேன் என அச்சப்படுகிறார்கள். திமுகவில் கட்சிப்பொறுப்புகள் விற்கப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.