பொதுவெளியில் இம்மாதிரி விஷயங்களை பேசுவதை விட கட்சிக்குள் யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசினால் சரியாக இருக்கும் என கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
தொகுதி மேம்மாட்டு நிதியின் மூலம் கோவை ராமநாதபுரம் பகுதியில் ஆர்.ஓ குடிநீர் வழங்கும் இயந்திரத்திற்கான திறப்பு விழா நடைபெற்றது. கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இவ்விழாவினை துவக்கி வைத்தார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவையில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. பிரதான சாலைகள் இணைப்பு சாலைகள் அனைத்தும் மோசமான சூழலில் உள்ளது. அதிமுக ஆர்பாட்டத்தில் இதைத்தான் பேசினேன். இதற்காகவே தான் ஆர்ப்பாட்டத்திற்கு சென்றேன். கோவை மாநகராட்சிக்கு தமிழக அரசு சாலை விஷயத்தில் மிகப்பெரிய துரோகத்தை செய்து வருகிறது. அதேபோல் தான் குப்பைகளையும் எடுக்கமாட்டேன் என்கிறார்கள். ஒரு எம்.எல்.ஏ குப்பைகளை எடுக்க திரும்ப திரும்ப பேச வேண்டியுள்ளது.
காயத்ரி ரகுராமிற்கு சிக்கல்கள் இருந்தால் கட்சியில் அதற்கான நபர்கள் இருக்கிறார்கள். சிக்கல்கள் குறித்து யாரிடம் பேச வேண்டுமோ அது குறித்து அவர்கள் தாராளமாக பேசலாம். கட்சியில் இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கட்சியில் இம்மாதிரி பிரச்சனைகள் வந்தால் அதை யாரிடம் சொல்வது அவர்கள் மூலமாக எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது கட்சியில் இருப்பவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தெரியும். பொதுவெளியில் இம்மாதிரி விஷயங்களைப் பேசுவதை விட கட்சிக்குள் யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசினால் சரியாக இருக்கும்” என்றார்.