சென்னையில் நேற்று ஈபிஎஸ் தரப்பு அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் தங்கப்பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காத்து வந்த இயக்கம் இன்றைக்கு எப்படி இருக்கிறது என அனைவரும் சொன்னார்கள். மனிதாபிமானம் இல்லாமல் சர்வாதிகாரத்தின் உச்சநிலையில் இருந்து கொண்டு நான் சொல்வது தான் சட்டம் என்ற நிலையை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அதிலும் தோற்றுப்போய் கட்சித்தொண்டர்கள், பொதுமக்களின் செல்வாக்கையும் இழந்துள்ளார்.
கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் எனத் தீர்மானம் கொண்டு வந்து ஜெயலலிதாவை நிரந்தரப் பொதுச்செயலாளர் ஆக்கினோம். ஆனால், அதை ரத்து செய்ய ஒருவருக்கு மனமிருந்தால் அவர்களை நாடு மன்னிக்குமா?
என்னை பொதுக்குழுவில் இருந்து வெளியில் அனுப்பினார்கள். அதற்காக மிகப்பெரிய சதி நடந்தது. நான் பொதுக்குழுவில் கலந்து கொள்ள தடை ஏற்படுத்த வேண்டும் என்ற சதி நடந்தது. அவர் பொதுக்குழு கூட்டத்திற்கு 7 மணிக்கெல்லாம் கிளம்பினார். 8 பாயிண்டுகளில் அவருக்கு வரவேற்பாம்..! பெரிய தலைவர் அவர்.. இந்த கட்சியை வளர்த்தவர்.. யார் நீ..? எம்ஜிஆரை நேரில் பார்த்து பேசியது உண்டா? நான் செல்லும் வழி எங்கும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு என்னை கூட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் தடுக்க வேண்டும் என நினைத்தார்.
200 ரூபாய்க்கு கைக்கூலிகளை கூட்டி வந்து மாலை போட்டவர்களே அவர்களுக்கு திரும்ப திரும்ப மாலை போடுகிறார்கள். நான் 40 நிமிடம் காத்திருந்தேன். அப்போது ஒரு ஏ.சி. வந்து என்னிடம் அவர்கள் வேண்டுமென்றே சாலையில் இருப்பதாக சொன்னார். எனவே நான் மாற்றுப்பாதையில் அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன்.
அலுவலகத்தில் மகாலிங்கம் வந்து பழனிசாமி வந்து கொண்டு உள்ளார். நீங்கள் கொஞ்சம் காத்திருங்கள். வந்து விடுவார் எனச் சொன்னார். நானும் காத்திருந்தேன். நான் இருந்த அறையை பழனிசாமி கடந்து சென்றார். என்னைப் பார்த்து தான் சென்றார். ஆனால், ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். ஆனாலும் சின்ன ரெஸ்பான்ஸ் இல்லாமல் கடந்து சென்று விட்டார்.
இதன் பின் மேடையில் தீர்மானங்களை நான் முன் மொழிகிறேன்; அவர் வழிமொழிகிறார். ஆனால், திடீரென சி.வி.சண்முகம் கட்சி விதி 23-யை ரத்து செய்யுங்கள் என மூன்று முறை சொல்லிவிட்டு போய்விட்டார். எவ்வளவு பெரிய கட்சி. யார் யார் பேச வேண்டும் எனத் தெரியவில்லை” என்றார்.