Published on 23/08/2019 | Edited on 23/08/2019
நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தினகரன் கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறி திமுக மற்றும் அதிமுக கட்சியில் இணைந்து வந்தனர். முக்கியமாக செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் இசக்கி சுப்பையா தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனையடுத்து நடந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் கட்சி போட்டியிடாது என்று அறிவித்தார். இதற்கு விளக்கமளித்த தினகரன் கட்சியை பத்தி செய்த பிறகே தேர்தலில் அமமுக கட்சி போட்டியிடும் என்று கூறினார்.
இந்த நிலையில், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும் போது, எங்கள் கட்சியை பதிவு செய்யும் பணியில் இருப்பதால் தான் வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியை பதிவு செய்து அதன்பிறகு தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சியில் இருக்கிறோம். கட்சியை பதிவு செய்த பிறகு நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிகளில் நிச்சயம் அ.ம.மு.க. போட்டியிடும் என்று கூறினார். மேலும் லஞ்ச, லாவண்யத்தை மறைக்கத்தான் மாவட்டங்களை பிரிக்கிறார்கள் என்று ஸ்டாலின் சொன்னதாக சொல்கிறார்கள். பாம்பின் கால் பாம்பிற்கு தெரியும். அதனால் அதுகுறித்து ஸ்டாலினிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றும் பேசினார்.