அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, ரஜினியை சந்திக்க முடியாமல், டெல்லி திரும்பியதும் பிரதமர் மோடியை சந்தித்து விவாதித்தார். அப்போது, தனது உடல்நிலையில் ரஜினி அக்கறை கொண்டிருக்கிறார். அது பற்றிய கவலை அவரிடம் இருக்கிறது. அதனால் அரசியல் குறித்து அவருக்கு அழுத்தம் தர வேண்டாம் என்றே கூறியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட மோடியும், கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்றே சொல்லியிருக்கிறார்.
ஆனால், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து, அரசியல் நிலைப்பாட்டினை விவாதிக்க விரும்புவதையும், அதில் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்கிற கருத்தை ரஜினி உருவாக்கப் போகிறார் என்பதையும் மத்திய உளவுத்துறையினர் பிரதமர் அலுவலகத்துக்குத் தகவல் சொல்லியுள்ளனர்.
அதற்கேற்ப, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் விவாதித்த ரஜினி, எனது முடிவை விரைவில் அறிவிக்கிறேன் எனச் சொன்னதும்தான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைமைகள் விழித்துக்கொண்டன. அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினி சொல்லிவிடப் போகிறாரோ எனப் பதட்டப்பட்டது.
அப்படி அவர் சொல்லிவிட்டால் மீண்டும் அவரை அரசியலுக்குள் இழுப்பது கடினம் எனவும் ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்தே பாஜக சார்பில் மோடியும், ஆர்.எஸ்.எஸ். சார்பில் பியூஸ் கோயலும் ரஜினியை தொடர்புகொண்டு, தமிழகத்தின் அரசியல் சூழலை விவரித்திருக்கிறார்கள்.
குறிப்பாக, தேர்தலில் திமுகவுக்கு சாதகமான சூழல் இருப்பதையும், ஆட்சியை திமுக கைப்பற்றினால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுகவை பலவீனப்படுத்திட முடியாது என்பதையும், அதனால் அதைத் தடுப்பதை இப்போது தவறவிட்டால், பிறகு எப்போதும் முடியாது என்பதையும், நீங்கள் அரசியலுக்கு வந்தால் மட்டுமே திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள். இதனை, ரஜினியால் மறுதலிக்க முடியவில்லை. தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார் என்கின்றன, தேசிய அளவிலுள்ள அறிவுசார் பா.ஜ.க வட்டாரம்.
பாஜகவின் மேலிடத் தொடர்புகளிடம் மேலும் விசாரித்தபோது, திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சியில்தான் பாஜகவின் வளர்ச்சி இருப்பதால் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் எதுவும் சிங்கிள் மெஜாரிட்டியில் ஆட்சி அமைத்து விடக்கூடாது என்பதும், அதேசமயம், பாஜக தலைமையிலான ஆட்சி அல்லது பாஜக சுட்டிக்காட்டும் நபரின் தலைமையில் ஆட்சி என்பதுமே மோடி-அமித்ஷாவின் இரட்டை அஜெண்டா! அதற்கான துருப்புச் சீட்டுதான் ரஜினி. அதனடிப்படையில், ரஜினிக்கான அரசியல் மாஸை உருவாக்கும் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. புத்தாண்டுக்குப் பிறகு அவைகள் களத்திற்கு வரும்.
திமுகவுக்கும் ரஜினிக்குமான போட்டியாகத் தேர்தல் களத்தை மாற்றும் யுக்திகள் அலசப்படுகின்றன. அதற்கேற்ப, ரஜினி தலைமையில் அன்புமணி, ஜி.கே.வாசன், கமல், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்களை இணைத்தால், அது சாதுரியமானதாக இருக்குமா? என்பதைப் பற்றி, டெல்லியில் சீரியஸாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.