
மாணவர்கள் படித்து உலக அரங்கில் உயர்பதவிகளில் இருப்பதே எனக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாணவர் விடுதி மற்றும் பேர்ல் ஆராய்ச்சிக் கட்டடத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய முதல்வர், “திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது மணமக்களுக்கு நான் சொல்லும் அறிவுரை பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை வையுங்கள் என்று கூறுவேன். கலைஞர் பெயரில் ஆண்கள் விடுதியை இங்கு திறந்து வைத்துள்ளேன். 80 கோடி மதிப்பில் 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படிக்கக்கூடிய வகையில் இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. அதேபோல் பேர்ல் ஆராய்ச்சிப் பூங்காவையும் தொடங்கி வைத்துள்ளேன். 157 கோடி மதிப்பில் இது கட்டப்பட்டுள்ளது. 69 ஆய்வகங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. ஆராய்ச்சிக் கல்விக்கு தலைசிறந்த இடமாக இது அமையக்கூடும்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் கல்வியில் சிந்தனையில் தலைசிறந்த ஆளுமைகளாக விளங்க இது போன்ற ஆராய்ச்சிப் பூங்காக்கள் ஏராளமாக தேவைப்படுகிறது. அவற்றை உருவாக்கும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது. திராவிட மாடல் என்றால் அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதன் அடிப்படையில் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஆட்சி நடந்து கொண்டுள்ளது. இதனை அறிந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வந்து கொண்டுள்ளனர்.
இப்படி உருவாகக் கூடிய நிறுவனங்களுக்கு ஏற்ற தொழில் வல்லுனர்களை உருவாக்குவது அரசின் கடமை. இதற்காகத்தான் நான் முதல்வன் என்ற திட்டம் அறிவித்தேன். இத்திட்டத்தை உலக நிறுவனங்கள் பலவும் பாராட்டுகிறது. புதுமைப் பெண் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வியும் கலைஞர் ஆட்சியில் கல்லூரிக் கல்வியும் முன்னேற்றம் அடைந்தது. இந்த ஆட்சியில் உயர்கல்வியையும் தாண்டி ஆராய்ச்சிக் கல்வியும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்.
கல்விதான் யாராலும் திருடமுடியாத சொத்து. அதை அடையக்கூடாது என பலரும் பல கட்டுக் கதைகளை சொல்லுவார்கள். அவர்களால் படிக்காமல் முன்னேறிய சிலரைத் தான் காட்ட முடியும். அதற்காக படித்து முன்னேறிய பலரை மறைத்து விட முடியாது. மாணவர்கள் படியுங்கள் நிறைய படியுங்கள். படித்து உலக அரங்கில் உயர்ந்த பதவிகளில் இருப்பது பெற்றோருக்கும் உங்களுக்கு பெருமை. எனக்கும் பெருமை. இந்த தமிழ்நாட்டிற்கும் பெருமை” எனக் கூறினார்.