Skip to main content

"10.5% உள் இடஒதுக்கீடு ரத்துக்கு அதிமுகதான் காரணம்" - அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு 

Published on 31/03/2022 | Edited on 31/03/2022

 

durai murugan

 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு, சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு தந்தது செல்லாது” எனத் தீர்ப்பளித்து தமிழ்நாடு அரசின் வன்னியருக்கான இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்தனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் , வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளது. மேலும், தமிழக அரசு தொடுத்திருந்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் கூறுகையில், "வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு இந்த வழக்கில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்ததாக தெரிவித்த துரைமுருகன், அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அதிமுக ஆட்சியில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதே தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பதற்கான காரணம் எனக் குற்றம்சாட்டினார்.

 

 

சார்ந்த செய்திகள்