ராஜுவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும், அவர்களின் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், "ஏழு பேர் விடுதலையை விரும்பியவர் ஜெயலலிதா. அதனால், அவரது கனவை நிறைவேற்றும் வகையில் அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றலாம். கேபினெட்டை கூட்டுங்கள்" என வலியுறுத்தியுள்ளார் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.
மூத்த அமைச்சர்கள் பலரும் இதே கருத்தை முதல்வரிடம் வலியுறுத்தி வரும் நிலையில், "தீர்ப்பின் நகல் வரட்டும். அதனை முழுமையாக ஆராய்ந்தப் பிறகு முடிவெடுக்கலாம்" என்று தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
இதற்கிடையே, ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை முடிவெடுத்து ஆளுநர் பன்வாரிலாலிடம் பரிந்துரைக்கும் பட்சத்தில், அந்த பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமா? அமைச்சரவையின் முடிவை அவர் நிராகரிக்க வாய்ப்பிருக்கிறதே? என்கிற கேள்விகள் தமிழக அரசியலில் எதிரொலிக்கவே செய்கின்றன.
இதுகுறித்து, சட்டவல்லுநர்களிடம் நாம் விசாரித்தபோது, "அமைச்சரவையின் முடிவை ஏற்காமல் அரசுக்கே திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், திருப்பி அனுப்பட்ட பரிந்துரையை தமிழக அரசு ஏற்காமல், மீண்டும் அமைச்சரவையைக் கூட்டி மீண்டும் தீர்மாணம் நிறைவேற்றி ஆளுநருக்கு அரசு பரிந்துரைத்தால், அதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டு முடிவெடுக்க வேண்டும். ஆக, அரசின் பரிந்துரையை ஒரு முறை தான் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உண்டு" என்கின்றனர்.
இந்த நிலையில், அமைச்சரவையை கூட்டி விவாதிப்பதற்கு முன்பு முதல்வர் எடப்பாடியிடம் வேறு சில திட்டமிடல்கள் இருப்பதாக தகவல் பரவி வருகின்றன. இது குறித்து விசாரித்தபோது, "தமிழக அரசும் ஆளுநரும் இதில் முடிவெடுக்கலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மையமாக வைத்து அமைச்சரவையைக் கூட்டி நாம் முடிவெடுத்ததாக இருக்கக் கூடாது.
இதற்கு மாறாக, ஏழு பேரின் குடும்பத்தினரும் தம்மை சந்தித்து அவர்கள் கோரிக்கை வைக்கட்டும். அவர்களின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் இதில் நல்ல முடிவை எடுப்போம். அதாவது, நீதிமன்றத்தின் உத்தரவுக்காக மட்டுமே முடிவு எடுக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பத்திற்காகவும், ஏழு பேரின் குடும்பத்தின் கண்ணீரை துடைப்பதற்காகவுமே நல்ல முடிவை எடுத்தோம் என்கிற தோற்றம் வரவேண்டும் என முதல்வர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
அதற்கேற்ப, ஏழு பேரின் குடும்பமும் முதல்வரை சந்திக்க நேரம் கேட்க வைப்பது எனவும், அதன்படி அவர்களை சந்தித்துப் பேசவும் ஆலோசிக்கிறது முதல்வர் தரப்பு. ஆனால், தமிழுணர்வு மிக்க மூத்த அமைச்சர்கள் சிலர், இதில் அரசியல் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர் " என கோட்டையிலுள்ள அதிகாரிகள் தரப்பில் எதிரொலிக்கின்றன.
இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 9ந் தேதி ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.