தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற அனைத்து கட்சிகளும், வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என தங்களது தேர்தல் பணிகளை முழுவிச்சில் செய்துவருகின்றனர். இதில் 125க்கும் மேலான தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன. அதன்படி கரூர் தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜியும், அதிமுக சார்பில் எம்.ஆர். விஜயபாஸ்கரும் போட்டியிடுகின்றனர். இருவரும் கரூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (17.03.2021) கரூர் பகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக தேர்தல் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசியபோது, ‘ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டவுடன் மாட்டுவண்டிகள் மூலம் மணல் அள்ள இருக்கும் தடைகள் அகலும். இதைத் தடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள்’ என்று பொருள்படும் வகையில் பேசியிருந்தார். இது சமூகவலைதளங்களில் திமுகவின் அராஜக போக்கு என பெரிய அளவில் வைரலானது.
அதற்கு விளக்கம் அளித்துள்ள செந்தில்பாலாஜி, “எங்களைச் சுற்றியுள்ள நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. எங்கள் கரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் குடும்பங்கள் மாட்டுவண்டி மணல் வியாபாரத்தை நம்பி இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. நிறுத்தினால், தமிழகம் முழுவதும் நிறுத்த வேண்டும். அல்லது அனுமதி கொடுத்தால், தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் இன்றைய கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர். அவர் ஒரு எம்.சாண்ட் குவாரி வைத்திருக்கிறார்.
மாட்டுவண்டி உரிமையாளர்கள் மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்றமும் இந்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்லியுள்ளது. அரசாங்கமும் விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் வாக்குறுதி என்பது நாமக்கல், திருச்சி போன்று கரூர் மாவட்டத்திலும் மணல் குவாரிகள் முறைப்படுத்தப்பட்டு, மாட்டுவண்டி உரிமையாளர்களுக்குப் பொதுப்பணித்துறை மூலமாக அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். கமல்ஹாசன், என்ன பேசுகிறோம் என தெரிந்து பேச வேண்டும். அவர் கட்சி வேட்பாளர் இங்குவந்து ‘நாங்கள் மணல் அள்ள அனுமதிக்க மாட்டோம். முறைப்படுத்த மாட்டோம்’ என பேச சொல்லுங்கள். விரைவில் திமுக ஆட்சி அமையும். அதன்பிறகு முறைப்படி இவர்களுக்கு மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.