விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான தொகுதி செஞ்சி. செஞ்சி கோட்டையாண்ட மன்னன் ராஜா தேசிங்கு என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியில், திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ.வும், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளருமான செஞ்சி மஸ்தான் களமிறங்கியுள்ளார். இவர், ஏற்கனவே ஐந்து முறை செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 2016ஆம் ஆண்டு தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றுள்ளார். தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் மஸ்தானுக்கு நல்ல அறிமுகம் உண்டு. அரசின் திட்டப் பணிகளை பல்வேறு கிராமங்களுக்கும் கொண்டு சென்றுள்ளார். கட்சியினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்வார். அதோடு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் உள்ளதால் மீண்டும் எம்.எல்.ஏ. என்ற தெம்போடு வலம் வருகிறார் மஸ்தான். அதற்கு முக்கியக் காரணம், இஸ்லாமியர் வாக்குகள் மஸ்தானுக்கு கைகொடுக்கும்.
அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராஜேந்திரனும் தொகுதியில் பிரபலமானவர். வன்னியர் சங்கப் போராட்ட காலம் முதல் தற்போது வரை கட்சிக்காக கடுமையாக உழைத்தவர். அதனால் அனைத்து கிராமங்களிலும் இவருக்கு அறிமுகம் அதிகம். ஏற்கனவே, 2011இல் அதிமுக கூட்டணி மூலம் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவும் பலமாக உள்ள தொகுதி.
இவர்களோடு தினகரனின் அமமுக சார்பில் கௌதம் சாகர், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஸ்ரீபதி, சீமானின் நாம் தமிழர் கட்சி சுகுமார் ஆகியோரும் போட்டியில் உள்ளனர். இவர்களில் அமமுக வேட்பாளராக உள்ள கௌதம் சாகர், ஏற்கனவே அதிமுகவின் நகரச் செயலாளராக பதவியில் இருந்தவர். தொகுதியில் உள்ள மக்களிடமும் கட்சியினரிடமும் நல்ல அறிமுகம் உள்ளவர். இவர் ஓரளவுக்கு கணிசமான வாக்குகளைப் பெறலாம் என்கிறார்கள் சிலர். இருந்தும் திமுக செஞ்சி மஸ்தான், பாமக ராஜேந்திரன் இருவருக்கும்தான் கடும்போட்டி. இருவரும் தற்போது வரை சமமான அளவில் போட்டியில் உள்ளனர். யார் வெற்றிக்கோட்டை தாண்டினாலும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெறுவார்கள் என்ற நிலை நிலவுகிறது.