தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிப்பட்டி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இதில் முதற்கட்டமாக அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்ததில், சிட்டிங் எம்எல்ஏவும், துணை முதல்வருமான ஓபிஎஸ் மீண்டும் போடியில் போட்டியிடுவார் என அறிவித்தது. அதைத் தொடர்ந்துதான் இரண்டாவது கட்டமாக அறிவித்த அதிமுக வேட்பாளர் பட்டியலில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு முருகன், ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு லோகிராஜன், கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு சையதுகான் என மூன்று அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. அதைக் கண்டு மாவட்டத்திலுள்ள அதிமுக கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இது சம்பந்தமாக மாவட்டத்திலுள்ள கட்சி பொறுப்பாளர்கள் சிலரிடம் கேட்டபோது, “கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இதே முருகனைத்தான் அதிமுக வேட்பாளராக பெரியகுளம் தொகுதிக்கு அறிவித்தனர். ஆனால் அவர் அரசு வேலை பார்ப்பதால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டி போட ஆர்வம் காட்டவில்லை என்று கூறிவிட்டார். அதோடு இந்த முருகனின் சொந்த ஊர் பெரியகுளம் அருகே உள்ள கல்லுப்பட்டி. அங்கும் ஒபிஎஸ் தம்பி ஓ.ராஜா, தற்கொலை செய்துகொண்டேன் என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்த பூசாரி நாகமுத்து உறவினர் என்பதனாலேயே இவருக்கு சீட் கொடுக்க கூடாது என கட்சிக்காரர்கள் மத்தியிலும் எதிர்ப்பு இருந்து வந்தது. அதன் அடிப்படையில் முருகனை மாற்றிவிட்டு கொட்டகை மயிலை வேட்பாளராக போட்டும் தோல்வியைத் தழுவினார்.
அப்படி இருக்கும்போது, தற்போது பெரியகுளம் தொகுதியில் அதிமுகவில் பலர் சீட்டுக்குப் பணம் கட்டி இருந்தும் கூட மீண்டும் அதே முருகனுக்கு ஓபிஎஸ் சீட் கொடுக்க பரிந்துரை செய்திருக்கிறார். முருகன் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர் என்பதனாலேயே இந்த சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது தவிர, மற்றபடி கட்சிக்காரர்கள் யாருக்கும் தெரியாது. இதனால் கட்சிக்காரர்களே அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள். அதுபோல் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவித்துள்ள மாவட்டச் செயலாளர் சையதுகான் உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியிருக்கிறார். வயதும் ஆகிவிட்டது, தொகுதியும் கேட்கவில்லை. அப்படி இருக்கும்போது வேண்டுமென்றே ஓபிஎஸ் சீட் கொடுத்து அதன் மூலம் சிட்டிங் எம்.எல்.ஏ. வானஜக்கையனை ஓரங்கட்டி இருக்கிறார். இப்படி வேண்டுமென்றே தனது ஆதரவாளர் என்பதற்காக சையதுகானை ஓபிஎஸ் பரிந்துரையின்பேரில் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கு பேசாமல் ஓபிஎஸ்ஸின் இளைய மகனான ஜெயபிரதீப்பை போட்டாக் கூட தொகுதியில் எளிதாக வெற்றிபெற முடியும்.
ஏற்கனவே பிஜேபியோடு அதிமுக கூட்டணி இருப்பதனாலேயே முஸ்லிம் ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது முஸ்லிமுக்கு கொடுத்தால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஓட்டு போடுவார்கள் என்ற நினைப்பில் கொடுத்திருக்கிறார். எப்படி முஸ்லிம் மக்கள் ஓட்டு போடுவார்கள். ஆக, பெயரளவில்தான் கம்பம் தொகுதி வேட்பாளராக சையதுகான் அறிவிக்கப்பட்டிருக்கிறாறே தவிர, தொகுதியைத் தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கம் எல்லாம் ஓபிஎஸ்-க்கு கிடையாது.
அதுபோல் ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் லோகிராஜனுக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது, திமுகவில் போட்டியிட்ட அண்ணன் நாகராஜனிடம் தோல்வியைத் தழுவினார். அப்படி இருக்கும்போது மீண்டும் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கட்சியில் பலர் கேட்டும்கூட ஓபிஎஸ் தனது ஆதரவாளர் என்பதனாலேயே லோகிராஜனுக்கு கொடுத்திருக்கிறார். இப்படி பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் ஆகிய மூன்று தொகுதிகளிலுமே ஓபிஎஸ் ஆதரவாளர்களை நியமித்திருக்கிறாரே தவிர, அதன்மூலம் கட்சி வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் ஓபிஎஸ்க்கு இல்லை.
ஏற்கனவே கட்சிக்காரர்களுக்கு ஒபிஎஸ் மீது அதிருப்தி இருக்கிறது. அந்த அளவுக்குத் தன்னை மட்டும் வளர்த்துக்கொண்டு பெரும்பாலான கட்சி பொறுப்பாளர்களையும் தொண்டர்களையும் வளரவைக்கவில்லை. அப்படியிருக்கும்போது தற்போது மூன்று தொகுதிகளிலும் தனது ஆதரவாளர்களைப் பெயரளவில் போட்டிபோட வைத்திருப்பது எதிர்க்கட்சியினருக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. அதனால் கட்சிக்காக உழைத்து வரும் கட்சிப் பொறுப்பாளர்கள் யாரையாவது மூன்று தொகுதிகளில் களம் இறங்கினால்தான் தொகுதிகளை அதிமுக தக்க வைக்க முடியும் என்று கூறினார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் மேல் கட்சிக்காரர்களே அருப்தியாக இருப்பது தெரியவருகிறது.