Skip to main content

 ‘நிர்மலா சீதாராமனை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்’ - செல்வப்பெருந்தகை அதிரடி அறிவிப்பு!

Published on 13/09/2024 | Edited on 13/09/2024
 Selvaperundagai Announcement on Demonstration urging Nirmala Sitharaman to apologize

கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ சீனிவாசன் மற்றும் பாஜகவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், அன்னபூர்ணா உணவக உரிமையாளருமான சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கையுடன் கேள்விகளை முன்வைத்தார்.

'உங்கள் பக்கத்தில் இருக்கிற எம்எல்ஏ (வானதி ஸ்ரீனிவாசனை குறிப்பிட்டு) எங்கள் ரெகுலர் அன்னபூர்ணா கஸ்டமர். வரும் போதெல்லாம் சண்டை போடுகிறார்கள். ஸ்வீட்டுக்கு 5% ஜிஎஸ்டி வைத்திருக்கிறீர்கள் இன்புட் கொடுக்கிறீர்கள். உணவுக்கு 5% ஜிஎஸ்டி வைத்திருக்கிறீர்கள் இன்புட் கிடையாது. காரத்திற்கு 12% வைத்திருக்கிறீர்கள். பேக்கரியில் உள்ள பிரட், பன்னை விட்டுவிட்டு மற்ற எல்லாவற்றுக்கும் 28% ஜிஎஸ்டி வைத்திருக்கிறீர்கள். இந்த அம்மா வர வேண்டியது ஜிலேபி சாப்பிட வேண்டியது. அடுத்தது காபி கொடுக்கணும். காரம் வேண்டும் என்பது. காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி என்று சொன்னால் உடனே சண்டைக்கு வருவது. இது டெய்லி எங்களுக்கு நடக்கிறது. ஒரே பில்லில் ஒரு ஃபேமிலிக்கு டிஃபரண்ட் டிஃபரண்டாக ஜிஎஸ்டி போட்டு கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. அதே நேரம் பன்னுக்குள்ள கிரீம் வைத்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி கொடுக்க வேண்டும். கஸ்டமர் என்ன சொல்கிறார்கள் என்றால் 'கிரீமையும் ஜாமையும் கொண்டு வா நானே பன்னுக்குள் வைத்துக் கொள்கிறேன்' என்கிறார்கள். கடை நடத்த முடியல மேடம். அதனால் ஒன்றாக எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டி ஜாஸ்தி செஞ்சுருங்க'' என கொங்கு தமிழில் கோரிக்கை தெரிவித்திருந்தார். இதனை கேட்டு அரங்கம் சிரித்தது.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து பேசியதோடு எம்.எல்.ஏ தன் உணவகத்திற்கு வந்து ஜிலேபி சாப்பிட்டு விட்டு சண்டை போடுவது குறித்தும் ஹோட்டல் சங்க நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்த, இது குறித்து அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவும் வெளியாகி இருந்தது. ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பியதற்காக உணவக உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறார் என எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.கவின் கனிமொழி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகியோர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் எழுப்பிய கோரிக்கையை உதாசீனப்படுத்தி ஆணவத்துடன் நடந்து கொண்ட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து நாளை (14.9.2024) மாலை 3.00 மணியளவில் கோவை ஆர்.எஸ்.புரம், காந்தி பூங்கா ரவுண்டானாவில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. வி.எம்.சி. மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் நான் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறேன். சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பலமுனை ஜி.எஸ்.டி. வரியினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து முறையிட்டதற்காக அச்சுறுத்தி, நிர்பந்தப்படுத்தி குறிப்பிட்ட தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்தது பா.ஜ.க.வின் அப்பட்டமான பாசிச போக்காகும். இத்தகைய ஜனநாயக விரோத போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்திரளானவர்கள் பங்கேற்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்