ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது திமுக. மாவட்ட சேர்மன், வைஸ்சேர்மன், 74 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. 9 மாவட்ட சேர்மன், வைஸ்சேர்மன், 73 ஒன்றியங்களின் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்குப் போட்டியே இல்லாத நிலை ஏற்படவுள்ளது. இந்நிலையில் சில ஒன்றியங்களில் பெரும் தோல்வியைச் சந்தித்த அதிமுகவுக்குச் சாதகமாக திமுக கவுன்சிலர்களை வாக்களிக்கவைத்து ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறவைக்க திமுக நிர்வாகிகளே முயல்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினிடம் புகாராகச் சென்றுள்ளதாகக் கூறுகிறார்கள் திமுக நிர்வாகிகள் சிலர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 வார்டுகள் உள்ளன. இதில் ஆளும்கட்சியான திமுக 11, அதிமுக 4, பாமக 2, சுயேச்சை 1. சேர்மன் தேர்தலில் வெற்றிக்குத் தேவையான இடங்களை விடக் கூடுதலாகவே திமுகவிடம் உள்ளன. இந்த ஒன்றியத்தின் சேர்மன் பதவி பொது பெண்கள் என வைக்கப்பட்டுள்ளது. சேர்மன் பதவியில் தனது மருமகள் காயத்திரியை நிறுத்தி வெற்றி பெறவைக்க முயற்சி செய்கிறார் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான தேவராஜ். இதற்குத்தான் கடுமையான எதிர்ப்பு எழுந்து திமுக கவுன்சிலர்களை அதிமுகவுக்கு வாக்களிக்கவைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் திமுக நிர்வாகிகள் சிலர் என்கிற தகவல் கிடைத்து. உண்மை என்ன என விசாரித்தோம்.
ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் பதவியைக் குறிவைத்து மாவட்டச் செயலாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏவுமான தேவராஜ், கட்சி நிர்வாகிகள் சிலரை ஓரம் கட்டினார். அதில் முக்கியமானவர் அவைத்தலைவர் முனிவேல். தேவராஜின் நெருங்கிய நண்பர். முனிவேல் தனது மனைவியை சேர்மனாக்க ஒன்றியக்குழு கவுன்சிலருக்கு சீட் கேட்டார். முனிவேலுக்கு மாவட்ட கவுன்சிலர் சீட் தந்து அவரை ஓரம்கட்டினார். மாவட்ட கவுன்சிலருக்கு வெற்றிபெற்ற முனிவேல்தான், ஆலங்காயம் சேர்மன் தேர்தலில் அதிமுக வெற்றிபெற திமுக கவுன்சிலர்கள் மூலம் காய்நகர்த்துகிறார். இவருக்குப் பின்னால் பொதுச்செயலாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் உள்ளார். என்னைப் பழிவாங்கக் கட்சியைத் தோற்கடிப்பவர்களுக்கு துணைபோகிறாரென முதலமைச்சரிடம் புகார் சொல்லிவிட்டுவந்தார் என்கிறார்கள்.
உண்மை அதுவல்ல. தேவராஜ் மருமகளை சேர்மனாக்க வேண்டும் என்பதற்காகவே கொத்தக்கோட்டை ஒன்றியக்குழு வார்டுக்கு தனது மகனான திமுக பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பிரபாகரனை கவுன்சிலர் தேர்தலுக்கு நிறுத்தியிருக்கலாம். மகன் வெற்றி பெற்றால் சேர்மனாக முடியாது என்பதால் அந்த வார்டில் திருமணமாகி சில மாதங்களேயான பிரபாகரன் மனைவி காயத்ரியை நிறுத்தினார். அதே வார்டில் அதிமுகவில் ஜெய்சங்கர் என்பவர் நிற்பதாக இருந்தது. அந்த பகுதியில் பிரபலமான செல்வாக்குமிக்க கட்சிக்காரர், அவர் நின்றிருந்தால் தேவராஜ் மருமகள் தோற்பதற்கு வாய்ப்புண்டு என்பதால் அவரை தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்க முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தபோது செய்தியாளர்கள் தாக்கப்பட்ட புகாரில் ஜெய்சங்கர் பெயரையும் நுழைத்தனர். இதனால் தலைமறைவான ஜெய்சங்கர், தனது மனைவியைத் தேர்தலில் நிறுத்த மனு செய்தார். அந்த மனுவை நேரம் முடிந்து தாக்கல் செய்த மனுவென ரத்து செய்யவைத்தார் தேவராஜ். தேர்தலில் திமுகவுக்குப் பெரிய வெற்றி, சேர்மன் பதவி திமுகவுக்கு என்பது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது. தனது மருமகள்தான் சேர்மன் என்பதில் உறுதியாகி அவரது பெயரை சேர்மன் வேட்பாளராக அறிவிக்க மா.செ என்கிற முறையில் தலைமைக்குப் பரிந்துரை செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில் சேர்மன் பதவிக்கான போட்டியில் திமுக நிர்வாகியும், அமைச்சர் துரைமுருகன் ஆதரவாளருமான பாரி தனது மனைவி சங்கீதாவை சேர்மனாக்க வேண்டும், எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்கிறேன் என துரைமுருகனிடம் சென்று கேட்டார். நிர்வாகிகள் சிலர், தேவராஜ் மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ. அவரது மருமகள் சேர்மன் என்றால் என்ன அர்த்தம். சேர்மன் பதவியை விட்டுத்தரச்சொல்லுங்க எனக்கேட்டனர். துரைமுருகனோ, என் பேச்சை தேவராஜ் கேட்பதில்லை. மா.செ அவர்தான் அவர்தான் பட்டியல் தரனும் அவர்கிட்டயே பதவி கேளுங்கள் சொன்னார். அவர்களும் வந்து தேவராஜ்யிடம் சேர்மன் பதவி கேட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இவர் கடுமையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதை அவர்கள் மீண்டும் துரைமுருகனிடம் கூறியுள்ளனர். இந்த விகாரத்தில் தலைவர் தான் முடிவெடுக்கவேண்டும் என்றுள்ளார். அவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட நிலையில் விவகாரத்தை தெரிந்துகொண்டு, தான் கட்சியினருக்குச் செய்த உள்ளடி, மருமகளை சேர்மனாக்கும் விவகாரத்தை மறைத்து உட்கட்சி எதிர்ப்புகளைச் சமாளிக்கத் தலைவரிடம் பொதுச்செயலாளர் மீது புகார் சொல்ல முடியாது என்பதால் அவரது மகன் வேலூர் எம்.பியான கதிர்ஆனந்த், அதிமுக வெற்றி பெறத் துணைபோகிறவர்களுக்கு ஆதரவாக என் மாவட்டத்தில் செயல்படுகிறார் எனப் பொய்யான தகவலைக் கூறியுள்ளதாகத் தெரிகிறது என்கிறார்கள்.