ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகள் இடைத்தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க தீவிரம் காட்டி வருகிறது. நேற்று அமைச்சர் கே.என்.நேரு ஈரோட்டில் பிரச்சாரத்தையே தொடங்கியிருந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேர்தலில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவதாக அக்கட்சியின்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
சென்னையில் 11 மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசுகையில், ''ஜனவரி 29ஆம் தேதி ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும். அதன் பிறகு பரப்புரை தொடர்ந்து நடைபெறும். விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னுடைய வேலை வெல்ல வேண்டும். நாங்கள் எங்கள் இலக்கை நோக்கி தான் பயணிப்போமே தவிர அவர் விமர்சிப்பார், இவர்கள் விமர்சிப்பார்கள், ஆதரிப்பார்கள் என்பது பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. எத்தனை அணிகள் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். ஆளும்கட்சி தான் வெல்லும் என்ற பொய் பிம்பத்தைக் கட்டமைத்து விடுகிறார்கள். மக்கள் மாற்றத்தை விரும்பிவிட்டால் ஆளுங்கட்சியாவது எதிர்க்கட்சியாவது ஒன்னும் கிடையாது. காவல்துறை, உளவுத்துறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கும் அந்த மாதிரி சூழலில் ஆளும்கட்சிதான் வெல்லும் என கட்டமைக்கப்படுகிறது'' என்றார்.