விருதாசலம் தொகுதியில், தே.மு.தி.க வேட்பாளராகப் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர் பிரவீன்குமாரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அப்போது, தே.மு.தி.க இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ், அ.ம.மு.க கடலூர் (மேற்கு) மாவட்டச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, “2006-ல் விஜயகாந்த் வெற்றிபெற்ற இந்தத் தொகுதியில், 2021ல் நான் போட்டியிடுகிறேன். ஏன் விருத்தாசலம் தொகுதியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் எனச் சென்னையில் கேட்டார்கள். கேப்டனுக்கும், தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத்திற்கும் முதல் வெற்றியைத் தந்தது விருத்தாசலம் தொகுதி. அன்றிலிருந்து விருத்தாசலம் தொகுதி மக்களின் உயிரோடும், உணர்வோடும், ரத்தத்தோடும் கலந்ததுதான் எங்கள் தேமுதிக.
2006-ல் விஜயகாந்த் அத்தனை நல்ல திட்டங்களையும் விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு செய்துள்ளார். அதன்பிறகு, 2011-ல் எங்கள் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளருக்கு வெற்றியைத் தந்தார்கள். மீண்டும், இந்த வரலாற்றை 2021-ல் நிரூபிப்போம். முரசு சின்னத்தில் போட்டியிடும் நான், அமோக வாக்குகளைப் பெற்று வெல்வேன் என்று உறுதியாக நம்புகிறேன். இதுவரை, 16 ஆண்டு காலம், நான் தேர்தல் பிரச்சாரத்தை மட்டும் மேற்கொண்டு வந்தேன். முதல்முறையாக வேட்பாளராக நான் விருத்தாசலத்தில் போட்டியிடுகிறேன். அதனால், இந்த முறை மற்ற 59 தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்குச் செல்ல இயலாது. ஏனென்றால், இன்னும் பதினைந்து நாட்கள்தான் இருக்கிறது. அதனால் எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தலைவர் விஜயகாந்த் ஈடுபடுவார்.
2006-லேயே விஜயகாந்த், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார். அதில், ஏதேனும் விடுபட்டிருந்தால் அந்த குறைகளையும் இந்த முறை நான் நிச்சயமாகச் சரி செய்வேன். விஜயகாந்த் சொல்லும் லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்போம். தமிழ்நாட்டின் கடன் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அதனால், இலவசப் பொருட்களை கொடுப்பதற்குப் பதில் வேலைவாய்ப்பு, மக்களுக்குத் தேவையான இருப்பிடம், கல்வி, இலவச மருத்துவம் வழங்க வேண்டும். அதைவிடுத்து, பொருட்களை இலவசமாகக் கொடுத்து மக்களை ஏமாற்றுவது சரியல்ல.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான நல்ல திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். அ.தி.மு.க கூட்டணியில் இருந்து நாங்கள் ஏன் வெளியேறினோம் என்பதற்கான தெளிவான விளக்கத்தை நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். அதனால், அது சம்பந்தமாக மீண்டும் மீண்டும் அதைப் பற்றி பேசவேண்டிய அவசியம் கிடையாது. எங்களுடைய இலக்கு மற்றவர்களை குறை சொல்வதைவிட நாங்கள் ஜெயிக்கும் தொகுதிகளில் மக்களுக்கு அனைத்து நல்ல விஷயங்களையும் செய்து எங்களுடைய தொகுதிகளை முன்னேற்றுவோம் என்பதே. 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சி மிகவும் பலமான ஒரு கட்சியாகத்தான் உள்ளது. அதிலும் கிராமங்கள் முழுவதும் கிளைக் கழகங்கள் இருக்கும் ஒரு மாபெரும் கட்சியாகத் தான் உள்ளது. மே 2ஆம் தேதி எங்களுடைய பலம் என்னவென்று தெரியும்" என்றார்.
"விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி வந்த நீங்கள், தற்போது தினகரனை முதல்வர் வேட்பாளராக எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நாங்கள் 60 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். அவர்கள் அதிகமான தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். எனவே ஏற்றுக் கொண்டோம்" என்று பிரேமலதா கூறினார். முன்னதாக விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலுக்குச் சென்ற அவர், கோயிலில் தரிசனம் செய்துவிட்டு தேர்தலில் வெற்றிபெற வேண்டி பிராது சீட்டு கட்டினார். அதனைத் தொடர்ந்து இன்று பிரேமலதாவுக்கு பிறந்த நாள் என்பதால் விருத்தகிரீஸ்வரர் கோயில் ஆலய வளாகத்தில் பிறந்தநாள் 'கேக்' வெட்டிக் கொண்டாடினார். பின்னர், அ.ம.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் சார் ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர்.