அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு நேற்று சசிகலா அவரது ஆதரவாளர்களுடன் மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா பேசுகையில், ''இத்தனை ஆண்டுகள் நான் மனதில் சேர்த்து வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா முன்பு இறக்கி வைத்துவிட்டேன். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காகவே வாழ்ந்தவர்கள்; தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர்கள். நிச்சயம் தொண்டர்களையும், கழகத்தையும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன்'' என்றார். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எப்போது செல்வீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் கூற மறுத்துவிட்டார்.
இந்நிலையில் அதிமுக பொன்விழாவையொட்டி எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா இன்றும் மரியாதை செலுத்தவிருக்கிறார். எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா மரியாதை செலுத்திய பின் ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தவிருக்கிறார். அதேபோல் ராமாவரம் தோட்டத்தில் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சியிலும் சசிகலா பங்கேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.