மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சியாக நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார்.
சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர். பல்வேறு திருப்பங்களுக்கு பின் பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த தேவிந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசமானது. இதனையடுத்து உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி பாஜகவிற்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
கூட்டணி உடைந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மத்திய பாஜக அரசை முழுமூச்சுடன் எதிர்த்து வருகிறார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது கூட, "நாடாளுமன்றத் திறப்பு விழாவில், காலையில் நடந்தவற்றை பார்த்தேன்; நான் அங்கு செல்லாதது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். யாகத் தீ வளர்த்து, புரோகிதர்களை கொண்டு கிரகப் பிரவேசம் போல புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்துள்ளனர்; இவை நாட்டை பின்னுக்கு இழுத்துச் செல்லும் செயல்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் பாஜக ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் ஏக்நாத்ஷிண்டேவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசியது மகாராஷ்ட்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் தொண்டு நிறுவனத்தின் 75 ஆவது தினத்திற்கு முதலமைச்சர் ஏக்நாத்ஷிண்டேவிற்கு சரத்பவார் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் மரியாதை நிமித்தமான சந்திப்பு என இருவர் தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்திப்பிற்கு பின் அரசியல் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.