காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. பாஜகவின் தேசியத் தலைவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்த வண்ணம் உள்ளனர். மேலும், கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடைபெறுவதால் ஆட்சியைத் தக்கவைக்க தீவிரப் பிரச்சாரங்களையும் பொதுக்கூட்டங்களையும் ஏற்பாடு செய்து தலைவர்கள் உரையாற்றுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் பிரதமர் மோடி 6 முறை கர்நாடக மாநிலத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் நடந்த இளைஞர்கள் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி பங்கேற்று உரையாற்றினர். அதில் தேர்தல் வாக்குறுதிகளாக சில அறிவிப்புகளையும் ராகுல்காந்தி வெளியிட்டார். குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்ட போது பல இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை குறித்து பேசினர் என்று கூறிய ராகுல்காந்தி, கர்நாடக மாநிலத்தில் பிறந்து படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். அதேபோல், டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியாக கூறினார். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகையும் அடுத்த ஆண்டில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரருக்கு ‘அன்னபாக்யா’ திட்டத்தின் மூலம் மாதந்தோறும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்றும், அனைத்து குடும்பத்தாருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.