ஆத்தூர் தொகுதியைப் பொறுத்தவரை அனைத்துச் சமூகமும் நிறைந்த தொகுதியாக இருந்து வருகிறது. இத்தொகுதியில், திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான ஐ. பெரியசாமி ஆறாவது முறையாக தேர்தல் களத்தில் குதித்து இருக்கிறார். அதுபோல் அதிமுக கூட்டணியில் இருக்கும் பா.ம.க. சார்பில், அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா களமிறங்கியிருக்கிறார்.
திமுக:
இத்தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றிருக்கும் ஐ.பெரியசாமி, தனது தொகுதியில் உள்ள அனைத்துச் சமூக மக்களுக்கும் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வது எனப் பணியாற்றிவருகிறார். கரோனா காலத்திலும் அத்தொகுதி மக்களுக்கு உதவிகள் செய்துள்ளார். அதுவே ஐ.பெரியசாமிக்கு பலமாக இருந்துவருகிறது. விவசாய மக்களுக்காக ஒரு கோடிவரை செலவுசெய்து கொடகனாறு மற்றும் குளங்களையும் தூர்வாரிக் கொடுத்திருக்கிறார். இப்படி அனைவரையும் அரவணைத்து தொகுதியை திமுக கோட்டையாகத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறார். அதனாலேயே ஆளுங்கட்சியான அதிமுக போட்டிப்போட அஞ்சி வருவதாகவும் அதனால், கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு ஒதுக்கியது எனவும் இத்தொகுதி மக்கள் பேசிவருகின்றனர்.
பாமக:
அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் திலகபாமா தொகுதியில் தீவிரமாகப் பணியாற்றிவருகிறார். இருந்தாலும், கட்சி வளர்ச்சி என்பது பெயரளவில் இருப்பது பலவீனத்தைக் காட்டுகிறது. அப்படி இருந்தும் பாமக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் திலகபாமா களம் இறங்கிவருகிறார். அதேபோல் அதிமுக பொறுப்பாளர்கள் பங்களிப்பைக் கொடுக்காதது பலவீனத்தைக் காட்டுகிறது. இருந்தாலும் பாமக வேட்பாளர் திலகபாமா தொகுதியில் வாக்காளர்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் செல்வகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சைமன் ஜஸ்டின், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிவசக்திவேல், உள்பட சில கட்சிகள் களமிறங்கினாலும் கூட பெரியளவில் ஓட்டு வங்கிகளைப் பிரிக்க வாய்ப்பில்லை. அதனால், ஆத்தூர் தொகுதியை திமுக கோட்டையாக தக்க வைப்பார் ஐ.பெரியசாமி என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.