சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழா தொடங்கும்போது பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘திராவிடநல் திருநாடு’ என்ற வார்த்தை விடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் நல் திருநாடு என்ற வார்த்தை விடுபட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய போது, “நான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது. தமிழ்த்தாய் வாழ்த்தில் 2 வரியைத் தூக்கியதற்காக கொந்தளிப்பதா? ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தபோது வராத கோபம் 2 வரியைத் தூக்கியதற்கு கொந்தளிப்பதா?. கீழடியில் கண்டெடுக்கப்பட்டது தமிழர் நாகரிகம்தான், திராவிட நாகரிகமோ அல்லது இந்திய நாகரிகமோ அல்ல. தமிழில் எழுத, படிக்கத் தெரியாத மூன்று தலைமுறைகளை உருவாக்கியதுதான் திராவிடத்தின் சாதனை” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த சீமான் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்தை, திமுக ஒன்றிய செயலாளரோ, மாவட்டச் செயலாளரோ, கலைஞரோ எழுதியது அல்ல. சுந்தரம்பிள்ளை எழுதிய கவிதை. அந்த தமிழ்த்தாய் வாழ்த்தை 50 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிக்கூடங்கள் உள்பட எல்லா இடங்களிலும் பாடப்படுகிறது. மனோன்மனியம் சுந்தரம்பிள்ளை பாடிய பாட்டையே சீமான் அவமதிக்கிறார் என்றால், அவரை எப்படி தமிழராக ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று பேசினார்.