Skip to main content

பிரதமர் மோடி திறந்து வைக்கும் நாடாளுமன்றக் கட்டடம்; அமித்ஷா அறிவிப்பு

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

Parliament building to be inaugurated by PM Modi; Amit Shah announcement

 

தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

 

கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" எனப் பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்க இருப்பதாக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் திமுகவும் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.

 

இந்நிலையில் பிரதமர் மோடியே நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மே 28 ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தில் 'செங்கோல்' நிறுவப்படும்; அரசரிடம் சொங்கோல் வழங்குவது சோழர்களின் மரபில் முக்கியத்துவம் வாய்ந்தது; பிரிட்டிஷாரிடமிருந்து அதிகாரம் இந்தியாவுக்கு கைமாறுவதை குறிக்கும் வகையில், 1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி முன்னாள் பிரதமர் நேருவிடம் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட செங்கோல் வழங்கப்பட்டது; அத்தகைய சிறப்புமிக்க செங்கோலை, பிரதமர் மோடி பெற்றுக்கொள்வார்; சபாநாயகரின் இருக்கைக்கு அருகே அது நிறுவப்படும் என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்