சென்னைக்கு 11-ந் தேதி மோடி வந்த நிலையில், அதற்கு முதல் நாள் டெல்லியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸையும், அன்புமணி ராமதாஸையும் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களது சந்திப்பு தொடர்பாக பா.ஜ.க. தரப்பிடம் விசாரித்த போது, தயக்கத்தோடு தான் அக்கட்சியினர் பேச ஆரம்பித்தார்கள். தமிழகத்தில் தாமரையை மலர வைக்க, மோடியும் அமித்ஷாவும் பெரிதும் நம்பியது நடிகர் ரஜினியைத் தான். ஆனால் அவர் தற்போது வரை எந்த க்ரீன் சிக்னலும் பாஜகவிற்கு கொடுக்கவில்லை.
அதனால், வேறு வியூகங்கள் பற்றி ஆலோசிக்கும் பா.ஜ.க. மேலிடம், தமிழகத்தின் வட மாவட்டங்களில் செல்வாக்கோடு இருக்கும் பா.ம.க.வைப் பா.ஜ.க.வோடு நெருக்கமாக்கும் முயற்சியில் டெல்லித் தலைமை இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போதைய நிலவரத்துக்கு அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி, அடுத்து பா.ஜ.க. சார்பில் முதல்வர் வேட்பாளர் என்கிற சாய்ஸையும் இந்த சந்திப்பின்போது மோடி கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால் நல்ல முடிவை விரைவில் எடுக்கும் படி தைலாபுரத் தரப்பிடம் மோடி கேட்டுக்கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறிவருகின்றனர். இந்த தகவல் குறித்து பா.ம.க. தரப்பிடம் கேட்டபோது, அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி பற்றித்தான் பேசி உள்ளார்கள். மற்றதெல்லாம் வெறும் யூகங்கள்தான் என்று கூறிவருகின்றனர்.