கரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் கேட்ட ரூ.4,000 கோடி ரூபாயை மத்திய அரசு காலம் தாழ்த்தாது உடனடியாக வழங்க வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவரும், திருவாடானை சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா பதிப்பால் மக்கள் அல்லல் படும் வேளையில் தமிழக அரசு சுகாதாரத்துறை வழியாகவும், ஊரக மற்றும் உள்ளாட்சி துறைவழியாகவும், மிக வேகமாக கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்க அன்றாடம் போராடுகிறது. இரவு பகல் பாராது பணியாற்றும், மருத்துவர்கள் செவிலியர்கள், மாண்புமிகு அமைச்சர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். தனித்திருப்போம் விழித்திருப்போம்! கரோனாவைத் தடுத்திடுவோம்!
கரோனா பாதிப்பால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே! அதற்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ. 1000/- தமிழக அரசு அளித்துள்ளது. கரோனாவின் பாதிப்பு அடுத்தடுத்த வாரங்களில் எப்படி இருக்கப் போகிறது என்பது தெரியவில்லை. இருப்பினும் கூடுதலாக மக்களுக்கு நிதி வழங்க தமிழக அரசு ஆவணம் செய்யவேண்டும்.
தமிழக காவல் துறைக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இரவு பகல் பாராது அன்றாடம் சாலைகளிலும், ரோந்து பணிகளும் ஈடுபட்டிற்கும் தமிழக காவல் துறையினருக்கு ஒரு மாதம் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழகம் கேட்ட ரூ 4000 கோடியை மத்தியரசு உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல், கொரோனோ தடுப்புப் பணிகளுக்காக தமிழக முதல்வர் கேட்ட ரூ.4,000 கோடி ரூபாயை மத்திய அரசு காலம் தாழ்த்தாது உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.