‘நல்லவன்; எனக்கு நானே நல்லவன்!’ என்கிற ரீதியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
“எளிய குடும்பத்தில் பிறந்த நான், அரசியலில் பொதுநல சிந்தனையோடு பணியாற்றி வருகிறேன். உள்ளாட்சி பொறுப்பு வகித்த போதும், அமைச்சராக இருந்த போதும், சட்ட விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதே இல்லை. நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி என்பது, என்னோடு பழகியவர்களுக்கும், நான் பெரிதும் மதிக்கும் தொண்டர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் கூட நன்றாகத் தெரியும். மனசாட்சிக்குக் கட்டுப்பட்டே வாழ்கிறேன். ஆனால், திட்டமிட்டே அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. விஜய நல்லதம்பி என்ற மோசடி பேர்வழி மீதுள்ள பல்வேறு வழக்குகள் குறித்து விருதுநகர் மாவட்டம் மட்டுமல்ல.. தமிழகமே நன்கறியும். அவருக்கும் எனக்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது. தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக என் மீது பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார். இதற்குமுன் பல கட்சிகளில் இருந்தபோதும், தன் மீது புகார் வரும்போது யாராவது ஒரு விஐபி மீது பழிசுமத்துவதை, விஜய நல்லதம்பி வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். இவர் போன்றவர்களிடம் பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.” என்று குமுறலைக் கொட்டியிருக்கிறார்.
யார் இந்த விஜய நல்லதம்பி? ராஜேந்திரபாலாஜியோடு என்ன பிரச்சனை?
அமரராகிவிட்ட சபாநாயகர் காளிமுத்துவின் உடன்பிறந்த தம்பிதான் விஜய நல்லதம்பி. இந்த உறவுமுறை, விஜய நல்லதம்பிக்கு பலவழிகளிலும் பயன்பட்டு வந்திருக்கிறது. விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய தம்பி விஜய நல்லதம்பிக்கு, வெம்பக்கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பு கிடைத்தது. ரவீந்திரன் என்பவர், தன்னுடைய சகோதரி மகனுக்கு ஆவினில் மேனேஜர் வேலை வாங்கித்தர, விஜய நல்லதம்பியிடம் ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார். வேலை வாங்கித்தராத நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட, பணத்தை திருப்பிக்கொடுக்காததால், கடந்த ஆகஸ்ட் மாதம் விஜயநல்லதம்பி மீது மோசடி புகார் கொடுத்தார். காவல்துறை விசாரித்தபோது, அக்டோபர் 1- ஆம் தேதி பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக உறுதியளித்தார் விஜயநல்லதம்பி. சொன்னபடி ரவீந்திரனுக்கு பணம் கொடுக்காத நிலையில், காவல்துறையிடம் ‘பலபேரிடம் வாங்கிக் கொடுத்த ரூபாய் 3 கோடியை ராஜேந்திரபாலாஜி திருப்பித்தரவில்லை’ என்று கூலாக புகார் கொடுத்திருக்கிறார் விஜயநல்லதம்பி.
“இது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு.. விஜயநல்லதம்பியின் கடந்தகால மோசடிகளை நீங்களே விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்..” என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திட்டவட்டமாக நம்மிடம் மறுத்தார்.
2010-ல் இதே ரீதியிலான ஒரு புகாரை விஜயநல்லதம்பி காவல்துறையிடம் அளித்தார். அப்போது ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் எனக்கு உறுப்பினர் பதவி வாங்கித்தருவதாகச் சொல்லி ரூ.69 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டனர். சந்திப்பு நடந்து பணம் கைமாறியது நட்சத்திர ஓட்டலில்..’ என, கலைஞரின் மகள் செல்வி, உமா மகேஸ்வரி, வேளச்சேரி ரவி உள்ளிட்டோர் மீது புகார் அளித்தார். அந்தப் புகாருக்கு காவல்துறையிடம் விளக்கமளித்த செல்வியின் உறவினரான உமாமகேஸ்வரி ‘நல்லதம்பியை வேளச்சேரி ரவி எனக்கு அறிமுகம் செய்துவைத்தபோது செல்வி அங்கு இல்லவே இல்லை. அவரிடம் பணம் எதுவும் வாங்கவில்லை. முற்றிலும் பொய்யான ஒரு தகவலைக் கூறி, வேண்டுமென்றே பிரச்சனையில் என்னைச் சிக்கவைக்கப் பார்க்கிறார்.’ என்று மறுத்தார்.
‘மோசடி புகாரில் சிக்கும்போதெல்லாம் யாராவது ஒரு விஐபி பெயரைச் சொல்லி தப்பிக்கப் பார்ப்பதாக விமர்சனத்துக்கு ஆளாகி வருகின்றீர்களே?’ என விஜயநல்லதம்பியை தொடர்பு கொண்டபோது கேட்டோம். “ராஜேந்திரபாலாஜி மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கு என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. நேரில் தருகிறேன். நான் மோசடி பேர்வழி என்றால் அ.தி.மு.க. எப்படி எனக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பு கொடுத்தது?” என்று வினவியரை இடைமறித்து, ‘ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான ஆதாரங்களில் ஒன்றை வாட்ஸ்- அப்பில் அனுப்பி வையுங்களேன்..’ என்று கேட்டோம். “அதெல்லாம் நேரில்தான் தர முடியும். நானே உங்களைச் சந்திக்கிறேன்.” என்று கூறியவரிடமிருந்து, இரண்டு நாட்கள் கடந்தும் நோ ரெஸ்பான்ஸ்!
இந்நிலையில், ‘கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்ட விஜயநல்லதம்பி, அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.’ என ஓ.பி.எஸ்.ஸும், ஈ.பி.எஸ்.ஸும் கையெழுத்திட்டு, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அரசியலில் தனி முத்திரை பதித்தவர் காளிமுத்து. அவருக்கு, இப்படி ஒரு ‘நல்ல’ தம்பியா?