ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் தெலுங்கானாவில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இன்று தெலுங்கானாவில் காங்கிரஸின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் முன்னாள் தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, “ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் ஏதாவது ஒரு வழக்கு உள்ளது. இ.டி, சி.பி.ஐ., வருமான வரித் துறை என இந்தப் பட்டியல் உள்ளது. ஆனால், தெலுங்கானா முதல்வர் மீது ஒரு வழக்கும் இல்லை. அதேபோல், எ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் மீதும் வழக்கு இல்லை. நரேந்திர மோடி அவரது நபர்களை தாக்கமாட்டார். நரேந்திர மோடி, உங்கள் முதல்வரையும், எ.ஐ.எம்.ஐ.எம். கட்சியையும் தனதாக நினைக்கிறார். அதன் காரணமாகவே அவர்கள் மீது வழக்கு ஏதும் இல்லை” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, “தெலுங்கானா மக்களுக்கு ஐந்து வாக்குறுதிகளை தருகிறேன். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500, காஸ் சிலிண்டர் ரூ. 500க்கு வழங்கப்படும், அரசு பேருந்தில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம், வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை, வீடுகட்ட ரூ. 5 லட்சம் மற்றும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.