கடந்த 10 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, "இந்த நிதிநிலை அறிக்கை என் பெயரில் வெளியிடப்பட்டாலும், இதில் பலரது உழைப்பு இருக்கிறது. முதல்வர் காட்டிய வழியில் இந்த நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் பொதுசந்தா கடன் 2.63 லட்சமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த கடன் 5.24 லட்சம் கோடியாகவும், தமிழகத்தின் மொத்த நிதிப்பற்றாக்குறை 92 ஆயிரம் கோடியாகவும் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறையில் இவ்வளவு மாற்றம் ஏற்பட்டது இல்லை. கரோனா வருவதற்கு முந்தியே இந்த சரிவு தொடங்கிவிட்டது" என்றார்.
இந்நிலையில், இன்று வெளியான வெள்ளை அறிக்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரின் கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''தமிழகத்தின் நிதிநிலை, நிதிச்சுமையைச் சமாளிக்க அறிக்கை மட்டுமே போதாது. சீர்திருத்தங்கள் தேவை. கவலை தரக்கூடிய வெள்ளை அறிக்கை அதிர்ச்சியுடன் சிந்திக்க வைக்கிறது. இலவச, கருணைத்தொகைகளை ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். அனுபவமிக்க நிதியமைச்சர் மற்றும் பொருளாதாரக் குழு இருப்பதால் மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். இருட்டை இகழ்வதைவிட வெளிச்சத்தைத் தூண்டுவதே நல்லது என்பதற்கேற்ப அரசு செயல்பட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.