Skip to main content

“பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் வராததற்கான காரணம்...” - அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

"Reason of non-appearance of students for public examination.." - EPS condemns Govt

 

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பள்ளிகள் திறப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், சுமார் 670 அரசு மேல்நிலைப் பள்ளிகள், சுமார் 435 உயர்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

 

ஒரு வகுப்புக்கு அதிகபட்சமாக 35 முதல் 40 மாணவர்கள் இருக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையின் காரணமாக வகுப்புகளில் இரு மடங்கு மாணவர்கள் படிப்பதால் வகுப்பறைகளில் மாணவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் (Class Control) வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிக் கவனம் செலுத்தி பாடம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்ட காரணத்தினால், சென்ற ஆண்டு 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்தன. +2வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வராதது அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஆராய திமுக அரசு ஒரு குழு ஒன்றை அமைத்ததாக செய்திகள் தெரிவித்தன.

 

அக்குழுவின் அறிக்கை என்னவாயிற்று என்று இதுவரை தெரியவில்லை. ஆசிரியர் பணியிடங்களும் முழுமையாக நிரப்பாத நிலையில் தற்போது தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது பெற்றோர்கள் மத்தியில், தங்களது குழந்தைகளின் கல்வி பற்றி பெரும் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆசிரியர் கலந்தாய்வினை குறித்த காலத்தில் நடத்தாத காரணத்தினால் ஒரு சில பள்ளிகளில் மிகை ஆசிரியர்களும், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளன. பள்ளிகளில் மிகை ஆசிரியர்கள் உள்ளனரா என்பதை தற்போதுள்ள எமிஸ் (EMIS)-ஐக் கொண்டே பள்ளிக் கல்வித்துறை தெரிந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பலமுறை பல்வேறு காரணங்களைக் கூறி  திமுக அரசு தள்ளி வைத்துள்ளது. தற்போது, ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

 

எனவே, இம்முறையாவது திட்டமிட்டபடி கலந்தாய்வினை நடத்திட வேண்டும். இதனால் மிகை ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல இயலும். ஓரளவு ஆசிரியர் காலிப் பணியிடங்களும் பணி மாறுதல் மூலம் நிரப்பிட முடியும். எனவே, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகும் பொறுப்பை மற்றவர்கள் மீது சுமத்தாமல், தமிழகத்தில் ஆசிரியர் தகுதி பெற்றவர்கள் லட்சக்கணக்கில் இருக்கும் நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கிட, போர்க்கால அடிப்படையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டுமென்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்