![ramadoss](http://image.nakkheeran.in/cdn/farfuture/WLhuoZrhZbQ2XHgfJ_VIsd3VtADWeO-VH8-wLG8n-TY/1588757549/sites/default/files/inline-images/611_5.jpg)
மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனாவைக் கிட்டத்தட்ட ஒழித்து விட்ட கேரளமே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்தில் இவ்வளவு அவசரம் தேவையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டில் 6 வாரங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில், அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் அரசு கொடுத்த அரிசியை ஆக்கிச் சாப்பிடும் நிலையில், காசு இல்லாமல் காய்கறிகளையே கண்ணால் பார்க்காத நிலையில், அன்புக் குழந்தைகள் ஆசையாய் கேட்டதைக் கூட வாங்கிக் கொடுக்க இயலாத நிலையில், வாரக் கணக்கில் வறுமையின் உச்சத்தைத் தொட்டு வந்த நிலையில், போதையை மறந்து மக்கள் தெளிந்து வரும் போது தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்தால் ஏழைக் குடும்பங்களின் நிலை என்ன ஆகும்? குடும்பத் தலைவியின் தாலியும், தட்டுமுட்டு சாமான்களும் எங்கே போகும்?
தமிழ்நாட்டில் ஏற்கனவே கரோனா அரக்கன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மது அரக்கனும் களத்தில் குதித்து வீதிகளுக்கு வந்து சதிராட்டம் ஆடத் தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களின் நிலை என்னவாகும்? கரோனாவிடமிருந்து அவர்களை யாரால் காப்பாற்ற முடியும்?
மதுக்கடைகள் திறக்கப்பட்டால் வீடுகளில் உள்ள மக்களின் கவனம் மது விற்கும் சாலைகளை நோக்கித் திரும்பும் என்பதால் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளைத் திறக்க கேரள அரசு தடை விதித்திருக்கிறது. கரோனாவைக் கிட்டத்தட்ட ஒழித்து விட்ட கேரளமே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்தில் இவ்வளவு அவசரம் தேவையா? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.