கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த வைரஸ். அந்தவகையில் உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில், இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளது. மேலும், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசார் முக கவசம் அணிந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழலில் கையில் பணம் இல்லாதவர்கள், உணவில்லாமல் இருப்பவர்களுக்கு இலவசமாக உணவளிக்க வேலூர் மாநகர ரஜினி மக்கள் மன்றத்தினர் அறிவித்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி மக்கள் மன்றத்தினர் முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.