பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி வரை மோசடி செய்தார் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது அதிமுக முன்னாள் ஒ.செ.விஜயநல்லதம்பி அளித்த புகார் வழக்காகப் பதிவானது. இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் அந்த மனுவை விசாரிப்பதற்குள் கர்நாடகாவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
6-ஆம் தேதி, ராஜேந்திரபாலாஜியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திரபாலாஜி அவசர அவசரமாக கைது செய்யப்பட்டுள்ளார் என, அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே குறிப்பிட, நீதிபதிகள் ‘இந்த மனு விசாரணைக்கு வருவது தமிழக அரசுக்கு தெரியாதா? அவசர அவசரமாக ராஜேந்திரபாலாஜியைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த விசாரணைக்கு காத்திராமல் அவசரமாக கைது செய்யாவிட்டால் வானம் இடிந்தா விழப்போகிறது? இந்த கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செய்யப்பட்டதா?’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு நான்கு வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜேந்திரபாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.