“நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால் திமுகவினருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர் உள்ளனர். எந்த நேரத்திலும் இரு தேர்தலும் ஒரே நேரத்தில் வரலாம்” என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டம்தான் இன்றும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு குழந்தைகள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றனர். தைப் பொங்கலுக்கு எம்ஜிஆர் கொண்டு வந்த வேஷ்டி - சேலை தி்ட்டத்தைதான் இன்றும் அரசாங்கம் வழங்கி கொண்டு இருக்கிறது. அவருடைய திட்டங்கள் இன்றும் ஏழை எளிய மக்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்றுள்ளன. இன்றைக்கும் ரேசன் கடைகளில் சேலை வாங்கினால் கூட இது எம்ஜிஆர் சேலை என்று மக்கள் கூறுகின்றனர். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களையும் நிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்கள் திமுக ஆட்சியாளர்கள்.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள், எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. அம்மா பரிசுப் பெட்டகம், தாலிக்குத் தங்கம், திருமணம் உதவித்தொகை, கல்வி உதவித் தொகை இப்படி பல்வேறு அதிமுகவின் திட்டங்களை நிறுத்தி விட்டனர். சைக்கிள் வழங்குவதை பகுதியாகக் குறைத்து விட்டனர். லேப்டாப் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். முதியோர் பென்ஷன் அனைத்தையும் நிறுத்திவிட்டனர். அதிமுக அரசின் எல்லா திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை தருவதாகச் சொன்ன திமுக இதுவரை வழங்கவில்லை. திமுக கொடுத்த 520 தேர்தல் அறிக்கையும் பொய். திமுக பொய்யை சொல்லி வாக்கு வாங்கினார்கள். தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் விளையாட்டுத்தனமாக செங்கலைக் காட்டி, மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கினார். திமுக ஆட்சியில் யாரும் வாழ முடியாத அளவிற்கு விலையேற்றம் உள்ளது.
அரசு ஊழியர்கள் முதல்வரை எதிர்க்கட்சித் தலைவராகவே அவர் இருந்திருக்கலாம் என்று நினைக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு ஊழியர்களுக்காக குரல் கொடுத்த முதல்வர் தற்பொழுது அவர்களைக் கண்டுகொள்வதில்லை. தமிழகத்தில் 11 ஆயிரம் பேருந்துகள் இயங்காமல் உள்ளது. பேருந்துகளை சீரமைக்க முடியாத நிலை உள்ளது. திமுக ஆட்சியில் விலையேற்றம் காரணமாக தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. திமுக கட்சியினரை பாதுகாக்க ஆட்சி நடத்தவில்லை, குடும்பத்தைப் பாதுகாக்கவே ஆட்சி நடத்துகிறார்கள், திமுக கட்சியினரே திமுக ஆட்சியை விரும்பவில்லை. திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். முதல்வர் சொல்வதை அமைச்சர்கள் கேட்பதில்லை, அமைச்சர்கள் சொல்வதை முதல்வர் கேட்பதில்லை. அரசு சொல்வதை மக்கள் கேட்க தயாராக இல்லை. தேர்தல் எப்பொழுது வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதிமுகவில் சண்டை ஏற்படும்போது திமுக உள்ளே புகுந்துவிடும். மக்கள் ஏற்றுக்கொண்டு திமுக ஆட்சிக்கு வந்ததே இல்லை. நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால் திமுகவினருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர் உள்ளனர். எந்த நேரத்திலும் இரு தேர்தலும் ஒரே நேரத்தில் வரலாம்.” என்று பேசினார்.