ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த தொகுதியிலும் வருகிற 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆண்டிபட்டி தொகுதியை பொறுத்தவரை முக்குலத்தோர் பிரிவில் உள்ள பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர்.
மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் டிடிவி அணி சார்பாக தங்கதமிழ்செல்வன் மீண்டும் களம் இறங்க இருக்கிறார். இந்த நிலையில்தான் திமுக சார்பில் ஆண்டிபட்டி ஒன்றிய பொறுப்பாளரான மகாராஜனுக்கு ஸ்டாலின் சீட்டு கொடுத்து இருக்கிறார். கடந்த 1973 லிருந்து திமுகவில் ஐக்கியமான மகாராஜன் தலைமை அறிவிக்கும் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்தியும், கட்சிக்காரர்களை அரவணைத்துக் கொண்டு கட்சியை வளர்த்து வரும் மகாராஜனின் குடும்பம் பாரம்பரியமாகவே வசதியான குடும்பம். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உருவானதற்கு 25 ஏக்கர் நிலத்தை தானமாகவே மகாராஜனின் குடும்பம் கொடுத்துள்ளது. அது போல் மகாராஜன் பிரமலைக்கள்ளர் சமூகத்தில் வசதிபடைத்தவராக இருந்தாலும் கூட அனைவருடனும் அன்பாகவும் எளிமையாகவும் பழகக்கூடியவர். அதன் அடிப்படையில்தான் ஸ்டாலினும் மகாராஜனுக்கு திமுகவில் சீட்டு கொடுத்திருக்கிறார்.
ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை திமுக வேட்பாளரான மகாராஜனை எதிர்த்து லோகிராஜனை களம் இறக்கி இருக்கிறார் ஓபிஎஸ். இந்த லோகிராஜன் யார்? என்றால் திமுக வேட்பாளரான மகாராஜனின் உடன் பிறந்த சகோதரர். இந்த லோகிராஜன் ஆண்டிபட்டி அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்து கொண்டு கட்சிக்காரர்கள் மத்தியிலும் நல்ல பெயர் எடுத்து வருகிறார். அதோடு ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் என்பதால் லோகிராஜனை களத்தில் இறக்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் திமுக வேட்பாளரான அண்ணன் மகாராஜனை எதிர்த்து அதிமுக சார்பில் தம்பி லோகிராஜனும் களமிறங்கப் போகிறார். அண்ணன் - தம்பிக்கு இடையே அ.ம.மு.கழகம் சார்பில் மீண்டும் தங்கதமிழ்செல்வனும் களம் இறங்க போவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க இருக்கிறது!