தமிழக காங்கிரசுக்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தின் (80 சதவீத நியமனங்கள்) பின்னணியில் பல லட்சங்கள் விளையாடியிருக்கின்றன என்று கே.எஸ். அழகிரிக்கு எதிராக சோனியாவிடமும் ராகுல் காந்தியிடமும் முன்னாள் தலைவர்கள் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த பண விளையாட்டிற்குத் தமிழக காங்கிரசின் மேலிட பார்வையாளர்களாக இருந்த சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்றும் ராகுலுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதனை கேள்விப்பட்டு ஏகத்துக்கும் அப்-செட்டாகியுள்ள ராகுல் காந்தி, ’’தமிழக காங்கிரசிலும் சத்தியமூர்த்தி பவனிலிலும் புரோக்கர்களின் தலையீடுகள் அதிகமாகி விட்டன’’ என்று ஆதங்கத்துடன் கமெண்ட் பண்ணியிருக்கிறார். இதற்கிடையே, சட்டமன்ற தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் ரகசிய வசூல் வேட்டையில் குதித்திருப்பது குறித்தும் காங்கிரஸ் தலைமையிடம் புகார்கள் வாசிக்கப்பட்டுள்ளன.
இதனை ஜீரணிக்க முடியாத ராகுல்காந்தி, சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் மற்றும் புதுவை காங்கிரசைக் கண்காணிக்க மேற்பார்வையாளராக வீரப்ப மொய்லி, பல்லம்ராஜூ, நிதின் ராவத் ஆகிய மூவரை அதிரடியாக நியமித்துள்ளார். சோனியா காந்தி ஒப்புதல் தந்த நிர்வாகிகள் நியமன பட்டியலின் பின்னணியில் நடந்திருக்கும் பண விளையாட்டுகளை ரகசியமாக விசாரிப்பதுடன், தேர்தலில் சீட்டு வாங்கித் தருவதற்காக நடக்கும் பேரங்களையும் கண்டுப்பிடித்து தனக்கு ரிப்போர்ட் அனுப்பி வைக்க வீரப்ப மொய்லியிடம் கேட்டுக்கொண்டுள்ளாராம் ராகுல் காந்தி.