ஐந்து கட்ட, ஆறு கட்ட தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது என சில ஏஜென்சிகள் காங்கிரஸ் கட்சியிடம் அறிக்கை கொடுத்துள்ளது. இதேபோல்தான் பாஜகவுக்கும் சில ஏஜென்சிகள் மற்றும் உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. அதில் இரு கூட்டணியிலும் இல்லாத மாநில கட்சிகளை ஒருங்கிணைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்தான் 7வது கட்ட தேர்தல் முடிந்த உடனேயே எக்ஸிட் போல் கருத்து கணிப்பு வெளியாகி இந்தியா முழுக்க அதைப்பற்றிய விவாதங்கள் நடந்து வந்தன. இந்த எக்ஸிட் போல் கருத்து கணிப்பால் பாஜக தரப்பு கொண்டாட்டமாகவும், காங்கிரஸ் தரப்பு அதிர்ச்சியடைந்தனர். மீடியாக்களிடம் தொடர்பு வைத்திருக்கும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே இந்த கருத்து கணிப்பு தவறானது என்று சொல்லி வந்தார்கள். 5ம் கட்ட மற்றும் 6ம் கட்ட தேர்தலின் முடிவை தெரிந்துகொண்ட பாஜகதான் எக்ஸிட் போல் கருத்து கணிப்பை வெளியிட வைத்தது என்று சிலர் எதிராக கருத்து தெரிவித்தனர்.
எக்ஸிட் போல் கருத்து கணிப்பால் சோர்வடையாத சந்திரபாபு நாயுடு தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். அப்போது வாக்கு எண்ணிக்கையில் நம்பகத்தன்மை வேண்டும், ஒப்புகைச் சீட்டு விசயத்தில் எந்த குளறுபடியும் வரக்கூடாது. எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகம் வராதப்படி வாக்கு எண்ணிக்கை நடக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர். அதில் சில கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரஸ் தலைமையை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது கட்சி போட்டியிட்ட இடங்களைவிட கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தேனி (காங்கிரஸ்), கரூர் (காங்கிரஸ்), ராமநாதபுரம், கோவை ஆகிய இடங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக திமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டவர்கள் எடுக்கும் முயற்சிகள் காங்கிரஸ் தலைமைக்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறதாம். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, அகமதுபடேல், குலாம்நபி ஆசாத், கமல்நாத் உள்ளிட்டவர்களுடன் சோனியாகாந்தி விவாதித்துள்ளார்.
இதில் எந்த ஒரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் என்ன செய்வது, அதனை எதிர்கொள்வது எப்படி. அந்த நேரத்தில் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரினால் என்ன செய்வது, அதனை தடுப்பத எப்படி. காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கான வழி என்ன. எந்த ஒரு சிறிய வாய்ப்பையும் விடக்கூடாது என்று பல்வேறு விதமான வியூகங்களை வகுத்து வருகிறார்கள்.
இதையடுத்தான் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது. மிகவும் உஷாராகவும், கண்காணிப்புடனும் இருக்க வேண்டும். பயப்பட வேண்டாம். நீங்கள் உண்மைக்காக போராடுகிறீர்கள். போலியான கருத்துக்கணிப்பு பிரசாரத்தினால் மனம் உடையாதீர்கள். உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய கடினமான உழைப்பு வீண் போகாது" என தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தியின் இந்த டுவிட்டர் பதிவு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.