உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெறவிருந்தது.
ஆனால் அமேதி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் துருவ் லால், அமேதி தேர்தல் அதிகாரியிடம் ராகுல் காந்தி குறித்து ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் , “கடந்த 2004-ம் ஆண்டு ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவில், பிரிட்டிஷ் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த முதலீட்டு ஆவணங்களில் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் இந்திய குடியுரிமையை இழந்துவிடுவார். எனவே ராகுல் காந்தியின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் அவரின் கல்வி சான்றிதழில் ராகுல் வின்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தியும், ராகுல் வின்சியும் ஒரே நபரா? இதில் உண்மைத்தன்மையை ஆராய அவரின் அசல் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ள்து.
இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி பதிலளிக்க அவகாசம் அளித்து வேட்புமனு மீதான பரிசீலனை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமேதி தொகுதிக்கு வரும் மே 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.