கடந்த 14ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் கலைஞர் வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் ஆர்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது ஊடகங்களை விமர்சித்துப் பேசினார். இதற்கு கண்டங்கள் எழுந்தன.
பத்திரிகையாளர்கள், டிவி ஊடகங்கள் பற்றி அநாகரிக வார்த்தைகளில் அவதூறு செய்த ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ்.பாரதி, நிதானம் தவறி தரம் தாழ்ந்து கீழ்த்தரமாக பேசியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வார்த்தைகளில் வரம்பு மீறிய பேச்சுக்கு அவர் உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. இதேபோல ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கமும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, திமுக என்று வரும்போது ஊடங்கள் பெரிதாக்குகிறார்கள் என்று விமர்சனம் செய்தேன். எந்த உள்நோக்கமும் கிடையாது. எந்த ஊடகத்தையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசவில்லை. நான் அதனை தவறாக உணர்ந்த காரணத்தினால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார்.