முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள்(95) உடல்நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 24 ஆம் தேதி காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்வேறு தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று தேனி பெரிய குளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அண்ணாமலையும் ஓபிஎஸ்ஸும் சந்தித்தனர். அண்ணாமலை ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “கோவில்பட்டியில் பாஜக ஆதரவினர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்துள்ளார்கள் என சொல்கிறார்கள். அது குறித்து ஒன்றும் தெரியவில்லை. கூட்டணி தலைவர்களை யாரும் இதுபோல் செய்யக்கூடாது என்பதைத்தான் எப்போதும் சொல்லி வருகிறேன். தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு அப்படி செய்திருந்தால் கூட இனிமேல் செய்யாதீர்கள்.
வடமாநில தொழிலாளர்கள் இங்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பது நமக்கு தெரியும். பாஜக தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. தமிழக மக்கள் அப்படி இல்லை என இந்திய அளவில் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டு உள்ளேன். எங்கள் மாநிலம் அப்படி இல்லை, இது யாரோ கிளப்பி இருக்கும் வதந்தி என பேசியுள்ளேன். திமுக அமைச்சர்கள் இதற்கு முன்னால் என்ன பேசினார்கள் என்பதை நான் தொடர்ந்து பேசி வருகிறேன். அவர்கள் இதை நிறுத்தினால் இந்த பிரச்சனைகள் நின்றுவிடும். இதை நான் பேசியதற்கு திமுககாரர்கள் வழக்கு தொடுத்துள்ளார்கள். திமுகவின் அரசியல் கொள்கை என்பது பிரிவினைவாதம். வடக்கு தெற்கு, திராவிட நாடு வேண்டும் என கேட்டவர் பெரியார். அந்த வழித்தோன்றலில் வந்தவர்கள் திமுகவினர். அம்பேத்கர் அதை அங்கீகரிக்கவில்லை.
வடமாநில தொழிலாளர்களை ஆதரித்து பேசினார்கள் என வழக்கு போடவில்லை. எங்கள் தலைவர்களை குற்றம்சாட்டி பேசினார் என வழக்கு போட்டுள்ளார்கள். இதற்கு முன் சில பத்திரிக்கைகள் நமக்கு எதிராக எழுதுவார்கள். இப்பொழுது காவல்துறையும் அவர்களைப் போல் எழுதியுள்ளது. பிரசாந்த் கிஷோர் இந்தியில் ட்விட் ஒன்று போட்டு இருந்தார். வடமாநில தொழிலாளர்களை தொடர்வண்டியில் வைத்து அடித்ததற்கும் பதில் சொல்ல வேண்டும் என கூறியிருந்தார். அப்பொழுது அவர் மேல் வழக்கு போடுவார்களா. அப்படியென்றால் ஒரே செல்லில் போடுங்கள். ரெண்டு பேரும் பேசிக்கொண்டாவது இருப்போம். இது தான் முதலமைச்சருக்கு நான் வைக்கும் கோரிக்கை” எனக் கூறினார்.