தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்காக கட்சி சார்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கடந்த சனிக்கிழமை புவனகிரி, அண்ணாமலை நகர் பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிமுகம் செய்துவைத்தார்.
தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் நிற்பதற்கு எப்படி சீட்டு வாங்கினீர்களோ அதேபோல் மக்களிடமும் ஓட்டும் வாங்க வேண்டும். திமுகவினர் வரும் தேர்தலில் கடுமையாக பணியாற்றி புவனகிரி அண்ணாமலை நகர் பேரூராட்சிகள் திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். சட்டசபைத் தேர்தலில் இந்த தொகுதிகளைக் கோட்டை விட்டது போல் தற்போது விட்டு விடக்கூடாது. கட்சியினர் கோஷ்டி பூசல் காரணமாக உள்ளடி வேலையில் ஈடுபட்டால் அவர்களை நான் மன்னிக்க மாட்டேன். எனவே திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கடுமையாக உழைத்து அதிக ஓட்டுகளைப் பெற்று திமுக வேட்பாளர்களையும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
நமது அரசு மீதும் முதல்வர் ஸ்டாலின் மீதும் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே திமுக கூட்டணி தான் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று ஆணித்தரமாகக் கூறுகிறேன். கட்சியின் முன்னாள் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். தேர்தல் பணியில் சுணக்கம் காட்டி வெற்றி வாய்ப்பை இழந்தால் உங்கள் கட்சி பதவிகளை இழக்க நேரிடும்” என்று கட்சியினருக்குக் கறாராகக் கட்டளையிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் புவனகிரி பேரூர் செயலாளர் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன், ஒன்றிய பொறுப்பாளர்கள் சங்கர், நடராஜன், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.