
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர்கள் வசிக்கும் பகுதியான எக்கியர் குப்பம் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்து 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டில் விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்துள்ளனர். விஷச்சாராயம் அருந்தி தமிழ்நாட்டில் மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூரில் மெத்தனால் விற்பனை செய்த அம்மாவாசை, மரக்காணத்தில் மெத்தனால் விற்பனை செய்த அமரன் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 13 பேர் மீது தற்போது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில், “தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு பாஜக சார்பில் வரும் 20 ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். இந்த கண்டன போராட்டத்தை நமது மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.