மதுரை மாவட்டத்தில் இன்று (08/11/2022) காலை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. ஒரு அற்புதமான திட்டத்தை வடிவமைத்து நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். 'எனது பூத் வலிமையான பூத்' என்கின்ற திட்டம். அதன் துவக்க விழாவிற்காக, இன்று மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன். கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் என்னோடு இருக்கிறார்கள். கட்சியை அடிமட்டத்திலே பலப்படுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து இடங்களிலும் நம்முடைய பூத் கமிட்டி வலிமையாக இருக்க வேண்டும். பூத் கமிட்டி என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் பணியாற்றாமல், 365 நாட்களும் மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து சேவை செய்ய வேண்டும் என்பதற்காக, புதிதாக வடிவமைக்கப்பட்ட பூத் கமிட்டியை இன்று துவங்கியிருக்கின்றோம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வரை இந்தி என்பது திணிக்கப்பட்டிருந்தது. கட்டாய மொழியாக இருந்தது. 1986 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இரண்டாவது கல்விக் கொள்கையில் இந்தியைக் கட்டாய மொழியாக வைத்திருந்தார்கள். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தி என்பது கட்டாயப் பாடமாக இருந்தது. 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வந்த பிறகு தான் இந்தி என்பது ஆப்சனாக கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தி திணிப்பு எங்கேயும் இருக்கக் கூடாது என்பது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம்; பா.ஜ.க. கட்சியின் விருப்பம். மூன்றாவது மொழி என்பது ஆப்ஷனல்.
மத்தியில் இருந்து வரக்கூடிய அமைச்சர்கள் சொல்கிறார்கள், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று. ஏன் நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கிறார்கள் என்றால், ‘இல்லம் தேடிக் கல்வி’ புதிய கல்விக் கொள்கையில் இருக்கக் கூடிய அம்சம். அதே புதிய கல்விக் கொள்கை இன்னொரு பெயரில் வருகிறது. நம்மைப் பொறுத்த வரையில், அது வந்தால் சரி. அது எந்த பெயரில் வந்தால் என்ன? மக்களுக்கு நல்லது நடந்தால் சரி என்று பார்க்கின்றோம்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவப் பாடத் திட்டத்தில் முதலாமாண்டு இந்தியைக் கொண்டு வந்த போது, தமிழகத்தில் மருத்துவப் படிப்பிலும், பொறியியல் படிப்பிலும் தமிழில் கொண்டு வாருங்கள் என்று முதலில் குரல் கொடுத்தது தமிழக பா.ஜ.க.. இதற்காக, தமிழகம் முழுவதுமே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இன்றைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். நமது அமைச்சர் சொல்கிறார், பொறியியல் பாடத்தில் தமிழ் கொண்டு வந்திருக்கிறோம் என்று. இன்றைக்கு பொறியியல் பாடத்திட்டத்தில் முழுமையாகத் தமிழை வைத்து படிக்கக் கூடியவர்கள் 69 பேர் தான்.
ஐந்து கல்லூரிகளில் தான் அது இருக்கிறது. அப்படி இருக்கும் போது தமிழை நீங்கள் என்ன வளர்த்திருக்கிறீர்கள்? ஒரு லட்சம் பேர் படிக்கக் கூடிய பொறியியல் கல்லூரிகளில் வெறும் 69 பேர் தமிழில் படித்தால், எப்படி தமிழ் வளரும்?" என்று கூறியுள்ளார்.