கர்நாடக மக்களின் கனவே தனது கனவு என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்நிலையில் பிரதமர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி 224 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டன. நாளை தேர்தல் எனும் நிலையில், நேற்றுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் பாஜகவும் மீண்டும் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டின. நாளை தேர்தல் என்பதால் கர்நாடகத்தில் அரசியல் களம் இன்னும் சூடாகவே உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள காணொளியில், கர்நாடக மக்களின் கனவே எனது கனவு. அவர்களின் பிரகாசமான எதிர்காலமே எனது வேண்டுகோள். 5 ஆவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவை 3 ஆவது இடத்திற்கு கொண்டு வர கர்நாடகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டியது சாத்தியம்.
My message to the people of Karnataka… pic.twitter.com/DvFGl952OV— Narendra Modi (@narendramodi) May 9, 2023
கர்நாடகாவை முதல் இடத்திற்கு கொண்டு வர மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். மேலும் கர்நாடகாவில் இரட்டை எஞ்சின் ஆட்சி மூன்றரை ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டது. கொரோனா காலத்தில் கூட பாஜக ஆட்சியின் கீழ் கர்நாடகத்திற்கு ரூ.90 ஆயிரம் கோடி அந்நிய முதலீடு கிடைத்தது. ஆனால் கடந்த அரசின் ஆட்சியின் போது ரூ.30 ஆயிரம் கோடி அந்நிய முதலீடு மட்டுமே கிடைத்தது என மோடி கூறியுள்ளார்.
நேற்று மாலையே பரப்புரை முடிந்த நிலையில் பிரதமர் வீடியோ வெளியிட்டது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடிக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.