கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அனைத்து கட்சிகள் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்த தகவல் அண்மையில் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 14 பிறகும் ஊரடங்கு நீட்டிக்க மாநில அரசுகளும், வல்லுநர்களும் பரிந்துரைத்துள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொருவரின் உயிரையும் காப்பாற்றுவதே அரசுக்கு முக்கியம் என கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். தற்போது உள்ள சூழல் சமூக நெருக்கடி நிலையை போல் உள்ளதால், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஊரடங்கின் 14வது நாள் செவ்வாயுடன் நிறைவடைந்த நிலையில், இன்று அனைத்துக்கட்சித் தலைவர்கள் ஆலோசனை, அதன்பின் துறை வாரியான ஆலோசனைகள் என பிஸியான மோடி, கரோனா குறித்த முழுமையான விவரங்களைத் திரட்டியபின், ஏப்ரல் 10ல் அடுத்தகட்டம் குறித்து முடிவெடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 21 நாட்கள் ஊரடங்கிற்குப் பிறகு நான்கைந்து நாட்கள் நிபந்தனைகளுடன் தளர்வை ஏற்படுத்தி, அரசு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மக்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள அவகாசம் தந்து, அதன்பின் மேலும் 15 நாட்கள் ஊரடங்கை எமர்ஜென்சி பாணியில் கடுமையாக அமல்படுத்துவது பற்றி தீவிரமாக ஆலோசிக்கிறார் என்கின்றனர்.