வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 60 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கையெழுத்திட்டார். இந்நிலையில் தற்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தை டிடிவி தினகரன் சந்தித்தார். தேர்தல் கூட்டணிக்குப் பிறகு முதன்முறையாக டிடிவி.தினகரன் விஜயகாந்தை சந்தித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி.தினகரன், ''எங்கள் கூட்டணியின் ஒரே கொள்கை தமிழகத்தில் தீய சக்தியான திமுகவும், துரோக கட்சியான அதிமுகவும் ஆட்சிக்கு வரக்கூடாது. அதற்காகத்தான் ஒன்று சேர்ந்துள்ளோம். எங்களுக்கும் தேமுதிகவுக்கும் ஒரு சில கொள்கைகளில் முரண் இருப்பதால் கூட்டணி வைக்க கூடாது என்றில்லை. சசிகலாவின் மானசீக ஆதரவு எங்கள் கூட்டணிக்குத்தான் இருக்கும். இந்த கூட்டணி கட்டாயத்தின் பேரில் உருவான கூட்டணி அல்ல, நாங்கள் பத்து நாட்களாக பேசிக்கொண்டுதான் இருந்தோம்'' என்றார்.