விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புதூர் கிராமத்தில் ஆராயி என்ற பெண்ணின் குடும்பத்தினர் மீது கடந்த 21 ஆம் தேதி மர்ம நபர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர். அத்தாக்குதலில் ஆராயியின் 8 வயது மகன் படுகொலை செய்யப்பட்டான். இத்தாக்குதலில் 14 வயது மகள் தனம் மற்றும் தாய் ஆராயியும் கடுமையாக தாக்கப்பட்டனர். ஆராயி, அவரது மகள் ஆகிய இருவரும் சுய நினைவற்ற நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பார்வையிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்: அப்போது அவர், ’’ஆராயி மற்றும் அவர் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமுமில்லை, இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே இவ்வழக்கினை சிபிஐ விசாரணை வேண்டும்’’ என்றார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் அமைக்க தமிழக கட்சிகள் கேட்டாலும் பிரதமர் நேரம் ஒதுக்காதது தமிழகத்திற்கும், விவசாயிகளுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகம். கர்நாடக தேர்தலை மனதில் வைத்து இது நடத்தப்படுகின்றது. இது தொடர்பாக மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தினார்.