2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி 'அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும் என தி.மு.க தலைமை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக கிராமங்கள்தோறும் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தவும் அறிவித்துள்ளார். அதன் பேரில் கடலூர் மாவட்டத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடலூர் அருகேயுள்ள கே.என்.பேட்டையில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு தொகுதி எம்.எல்.ஏவும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று பொது மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் இருப்பது குறித்து மக்கள் எடுத்துரைத்தனர்.
அப்போது பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “கடந்த ஐந்து ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை உயர்வு மாதாமாதம் ரூ.50, 100 என அடுத்தடுத்து உயர்ந்து வருகிறது. குறுகிய காலத்தில் 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதையெல்லாம் பெண்கள், ஆட்சியாளர்களிடம் கேட்க வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஆட்சி மாற்றத்தை கொடுங்கள். கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம். தி.மு.க சொல்வதைத்தான் செய்யும், செய்வதைத்தான் சொல்லும்” என்றார்.
இதனிடையே எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடலூர் கிழக்கு மாவட்டத்தில் 27.12.2020 முதல் 10.01.2021 வரை அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் 230 ஊராட்சிகள், நகராட்சிப் பகுதிகளில் 23 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 12 வார்டுகள் என மொத்தம் 365 இடங்களில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகராட்சி, பேரூராட்சி கழக செயலாளர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
அந்த சமயம், அந்தந்த பகுதிகளில் நடைபெறும் மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள், விவசாயிகள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.