சேலம் மாவட்டத்தில், தே.மு.தி.க கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (27-10-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “உதயநிதி ஸ்டாலின் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி நீட்டை ஒழிக்கப் போகிறேன் என்று சொல்கிறார். 50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட்டை ஒழிக்க முடியாது. நீட்டை ஒழிக்க முடியாது என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. அதனால், தயவுசெய்து மாணவர்களை குழப்பாதீர்கள். அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களை குழப்பி, அவர்களை திசை திருப்பும் வேலையை பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், மாணவர்கள் யாரும் இவர்கள் சொல்வதை கேட்க தயாராக இல்லை என்பது உண்மை. தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது என்பதை தெரிந்துகொண்டு மாணவர்கள் அனைவரும் படிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஏனென்றால், இந்தியாவிலேயே அதிகளவு படிப்பறிவு இல்லாத மாநிலம் பீகார். அந்த மாநிலத்தில் உள்ள மாணவர்களே நீட் தேர்வுக்கு தயாராகி படிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாவிலேயே அதிகளவு படிப்பறிவு உள்ள தமிழ்நாட்டு மாணவர்களை ஏன் இவர்கள் குழப்பி கொண்டிருக்கிறார்கள். நீட்டை ஒழிப்போம் என்று கூறிய ஒரே காரணத்திற்காக உதயநிதி ஸ்டாலின் அதையே கையில் கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்.
ஒரு அரசாங்கம், மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும். இனிமேல் நீட்டை ஒழிக்க முடியாது, அனைவரும் படிக்க தயாராகுங்கள் என்று அவர்களிடம் தெளிவாக சொல்ல வேண்டும். இன்றைக்கு அனைத்து மாணவர்கள் தேர்வு எழுத தயாராகிவிட்டார்கள். அதனால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிகமான மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள்” என்று கூறினார்.