Skip to main content

உங்களை விட 100 மடங்கு உணர்வு எங்களுக்கு உள்ளது: எடப்பாடி பழனிசாமி

Published on 15/07/2019 | Edited on 15/07/2019


   
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக எம்எல்ஏ தங்கம்தென்னரசு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

 
தங்கம்தென்னரசு:- தபால்துறையில் போட்டித் தேர்வுகளை ஆங்கிலம்-இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்று அறிவித்து அதன்படி நேற்று தேர்வு நடந்து இருக்கிறது. கடந்த மே மாதம் 14-ந்தேதி அனைத்து மாநில மொழிகளிலும் தபால் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி இந்தி, ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள். இந்தியை திணிக்கவும், தமிழை ஒதுக்கவும் திட்டமிட்டு மத்திய அரசு இதை செய்திருக்கிறது.
 

எனவே தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையிலும் அவர்களின் உரிமையை பாதுகாக்கவும் தமிழில் தபால் துறை தேர்வு எழுத அனுமதிக்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

 

eps


அமைச்சர் ஜெயக்குமார்:- தபால் துறை தேர்வின் முதல் தாளை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டும் எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு முதல் தாள் தேர்வு நடந்து இருக்கிறது. 2-வது தாளை தமிழிலும் எழுதலாம். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. முதல் தாள் ஆங்கிலம், இந்தியில் மட்டும் தான் எழுத வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பதை உறுப்பினர் தெரிவித்தார்.
 

இருமொழி கொள்கைகளில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. மாநில மொழிகளுக்கும் மத்திய அரசு உரிய உரிமை கொடுக்க வேண்டும் என்பதை இந்த அரசு வற்புறுத்தும். பாராளுமன்றத்தில் இதற்காக உங்கள் உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். எங்கள் உறுப்பினர்களும் குரல் கொடுப்பார்கள். நமது உரிமையை நிலைநாட்ட இந்த அரசு முயற்சி எடுக்கும்.


 

 

சட்டப்பேரவை திமுக துணைத் தலைவர்:- அமைச்சர் அளித்த பதில் அழுத்தமாக இல்லை. இருமொழி கொள்கை என்கிறார். ஒருமித்த கருத்து இருக்கிறது. ஆனால் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று குறிப்பிடாமல் வற்புறுத்துவோம் என்று பதில் அளித்து இருக்கிறார்.
 

அமைச்சர் ஜெயக்குமார்:- இருமொழி கொள்கை தான் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 37 பேரும், எங்கள் பாராளுமன்ற உறுப்பினரும், மேல்சபை உறுப்பினர்களும் வற்புறுத்த வேண்டும் என்பதை தான் தெரிவித்தேன்.
 

துரைமுருகன்:- எங்கள் உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள். அதுபற்றி பிரச்சனை இல்லை. அதை விட நாம் அனைவரும் இணைந்து 234 உறுப்பினர்கள் கொண்ட இந்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது தான் பலமிக்கதாக இருக்கும். அதுபற்றி அமைச்சர் குறிப்பிடவே இல்லை.
 

dmk mlas


 

சபாநாயகர்:- அமைச்சர் அரசு தரப்பில் விளக்கம் சொல்லிவிட்டார்.
 

துரைமுருகன்:- இந்தியை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றீர்கள். இதை தீர்மானமாக கொண்டு வந்து வற்புறுத்தலாமே? நமது வெறுப்பை காட்ட வற்புறுத்துவதாக தீர்மானம் கொண்டு வந்தால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது. இங்குள்ள 2 பிரச்சனை. இந்தி திணிப்பு. அதை எதிர்த்து தீர்மானம் உண்டா? இல்லையா?
 

ஓ.பன்னீர்செல்வம்:- தபால்துறை தேர்வுகளில் தமிழில் தான் முன்பிருந்தபடி நடத்த வேண்டும் என்பது நம் ஒட்டுமொத்தோரின் கருத்தாக உள்ளது. இந்த பிரச்சனை குறித்து பாராளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் நாளை அ.தி.மு.க. சார்பில் பிரச்சனை எழுப்பப்படும். அங்கு இதற்கு என்ன முடிவினை மத்திய அரசு சொல்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் நமது முடிவு எடுக்கப்படும்.


 

congress mlas

துரைமுருகன்:- துணை முதல்-அமைச்சர் மிக சாதூர்யமாக பதில் சொல்கிறார். நாளைக்கு அங்கு என்ன நடக்கும் என்றால் சபையை ஒத்தி வைத்து விடுவார்கள். எனவே இங்கு நம் மன்றத்தில் என்ன செய்யப்போகிறோம் என்பதைத் தான் கேட்கிறேன்.
 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- துணை முதல்-அமைச்சரும், அமைச்சரும், தெளிவாக பதில் சொல்லி உள்ளனர். இந்த விதியை போட்டது மத்திய அரசு. பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு வாதாடுவதற்கான வாய்ப்பினை நாம் வழங்கி இருக்கிறோம். எனவே அவர்கள் அங்கு வாதாடுவதில் என்ன தவறு உள்ளது. பாராளுமன்றத்தில் ஒரு பிரச்சனையை எழுப்பும் போது தான் அங்கு என்ன பதில் சொல்கிறார்கள்? என்பதை வைத்து ஒரு தெளிவான முடிவு கிடைக்கும். அதன் பிறகு நாம் அதற்கேற்ப முடிவு எடுக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு முடிவோடு இங்கு வந்துள்ளீர்கள். எப்படியும் வெளிநடப்பு செய்யும் எண்ணத்துடன் வந்திருந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். இந்த பிரச்சனையில் உங்களுக்கு உள்ள உணர்வு தான் எங்களுக்கும் உள்ளது. பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேர் என்ன சாதித்தீர்கள்? எங்களை கேள்வி எழுப்பினீர்களே? இப்போது உங்கள் உறுப்பினர்கள் 37 பேர் இருக்கிறார்களே அவர்கள் இதைப்பற்றி அங்கு பேச வேண்டியது தானே. இந்த வி‌ஷயத்தில் நாளை வரை பொறுத்திருக்க மாட்டீர்களா?


 

 

துரைமுருகன்:- இது ஒரு உணர்வுபூர்வமான பிரச்சனை. இந்தி திணிப்பு பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரச் சொல்கிறோம். ஆனால் நீங்கள் இதை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதால் அதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- தி.மு.க. உறுப்பினர்கள் காரணம் தேடித் தேடி பார்த்தார்கள். இப்போது இந்த பிரச்சினையை சாக்காக வைத்து வெளிநடப்பு செய்துள்ளனர். எங்களை பொறுத்தவரை உங்களை விட (தி.மு.க.) 100 மடங்கு உணர்வு எங்களுக்கு உள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவையிலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள்.
 

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்