கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து நடிகர் விஜயை சென்னை அழைத்துவந்த வருமான வரித்துறையினர், விஜயின் பனையூரில் உள்ள வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விஜயின் வீட்டில் 23 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையும் நடத்தினர். இதற்கிடையில் என்எல்சி நிர்வாகம் மாஸ்டர் படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என பாஜகவினர் சூட்டிங் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்படிப்பட்ட நெருக்கடியான காலக்கட்டத்தில் விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியது உள்நோக்கம் கொண்டது. இந்த மிரட்டலுக்கெல்லாம் விஜய் பயந்துவிட மாட்டார் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நடிகர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படுமா என கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார ஏற்றுக்கொள்வோம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டும் என அழைக்கவில்லை என தெரிவித்தார்.